ரூ.100 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கும் திமுக மாஜி அமைச்சர் மகேஷை, அக்கட்சியின் இளைஞரணி தலைவர் உதயநிதி சென்று சந்தித்தார்.
தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தரம் உயர்த்துதல், இதர அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி ரூ.100 கோடிக்கும் அதிகமாக முறைகேடாக பணம் வசூலித்த வழக்கில் திமுக மாஜி அமைச்சர் மகேஷ் நேற்று கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
வழக்கு குறித்து மகேஷிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்திருக்கின்றனர். அதற்காக அவரை காவலில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். ஓரிரு நாட்களில் இது தொடர்பான மனுவை முறைப்படி போலீசார் தாக்கல் செய்ய இருக்கின்றனர். 2 அல்லது 3 நாட்கள் வரை விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசார் மனுவில் குறிப்பிட உத்தேசித்துள்ளனர்.
இதனிடையே, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகேஷை, உதயநிதி இன்று சந்தித்தார். சந்திப்பின் போது வழக்கின் நிலவரம், அடுத்தக்கட்டமாக மேற்கொள்ளப்பட இருக்கும் சட்ட நடவடிக்கை போன்ற விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
