திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் சர்வீஸ் சாலையில் இருந்த பயணியர் நிழற்குடையை தனிநபர் லாபத்திற்காக அப்புறப்படுத்திய மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி அதிகாரி மற்றும் ஊழியர்கள் மீது த.வெ.க நிர்வாகி புகார் அளித்து உள்ள சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் தஞ்சை திருச்சி தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் நெடுஞ்சாலைத்துறை பஸ் பயணிகள் ஏறி இறங்குவதற்காக காத்திருப்பதற்கு பயணியர் நிழற்குடை அமைத்துள்ளது.
இந்த நிலையில் அந்த பேருந்து நிலையத்தில் இருந்த பயணியர் நிழற்குடையை கடந்த 24ஆம் தேதி திடீரென அகற்றப்பட்டு உள்ளது. இதனால் பஸ்ஸுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயில் மற்றும் மழை காலங்களில் பேருந்து நிறுத்தத்தில் நிற்கு முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து, பொதுமக்கள், 43-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர், தி.மு.க நிர்வாகிகள் தலைமையில் அப்பகுதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து வந்த திருவெறும்பூர் போலீஸார், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, நிழற்குடை அகற்றப்பட்டதற்கான காரணம் குறித்துக் கேட்டறிந்தனர்.
அந்த பேருந்து கொட்டகைக்கும் பின்புறம் ஜவுளிக்கடை திறக்க உள்ளதாகவும், அந்த ஜவுளி கடைக்கு இந்த பயணியர் நிழற்குடை இடையூறாக இருப்பதாகவும் அதை அகற்ற சொல்லி அந்த கடை உரிமையாளர் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் மனு அளித்ததின் பெயரில் அகற்றப்பட்டதகவும், இந்த உண்மை நிலவரத்தை அறியாமல் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி மாமன்ற உறுப்பினர் செந்தில் மீது கையூட்டு பெற்றதாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு அவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பற்றி தொடர்ந்து தவறுதலாக அவதூறு பரப்பி வருவதாகவும் தனது மனுவில் குறிப்பிட்டு மாமன்ற உறுப்பினர் செந்தில் காவல்துறை தலைவரிடம் மனு அளித்தார்.
திருச்சி மாநகராட்சி 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ந.செந்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; நான் கையூட்டு பெற்றதை சட்டமன்ற உறுப்பினர் நிரூபித்தால் நான் மாமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக தயார் எனவும் அவ்வாறு நிரூபிக்க தவறிய பட்சத்தில் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி அப்பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மறுபுறம் இச்சம்பவம் பற்றி 43வது வார்டு த.வெ.க வட்ட செயலாளர் சந்துருபாலாவிற்கு தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் சென்று எப்படி இங்கிருந்த பயணியர் நிழற்குடையை அகற்றலாம் என கூறி போராட்டத்தில் ஈடுபட திரண்டனர்.
இது சம்மந்தமாக திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அங்கு வந்த திருவெறும்பூர் போலீசார் த.வெ.கவினரிடம் உரிய புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து, த.வெ.க.,வினர் கலைந்து சென்றதோடு செயலாளர் சந்துரு பாலா திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்
அந்த மனுவில் காட்டூர் பேருந்து நிறுத்தம் பஸ் ஸ்டாப்பில் இருந்த பயணியர் நிழற்குடையை புதிதாக ஆரம்பிக்கப் பட உள்ள துணிக்கடை நிறுவனம் கடந்த 24ஆம் தேதி அகற்றி உள்ளது. அதற்கு 43 வது வார்டு கவுன்சிலர் செந்தில் மற்றும் மாநகராட்சி எஸ்.ஓ கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு இந்த பஸ் ஸ்டாண்டை இரவோடு இரவாக அகற்றி உள்ளனர். அதனால் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
க.சண்முகவடிவேல்
