தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கிய விவகாரத்தில் ரூ.100 கோடி மோசடி செய்ததாக முன்னாள் திமுக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக சிறைக்கு அழைத்து வரப்பட்ட அன்பில் மகேஸைச் சந்திக்க திமுக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் புழல் சிறை வாசலில் திரண்டனர். அப்போது அன்பில் மகேஸின் தீவிர ஆதரவாளரான வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் என்பவர், போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு ஆவேசமாக முழக்கமிட்டார்.
அந்த பரபரப்பான சூழலில் அவர், “தலைவரே அன்னைக்கே அவன கரூரிலேயே போட்டிருந்தால் (கதையை முடித்திருந்தால்) இந்த நிலைமை வந்திருக்குமா?” என அருகில் இருந்தவர்களிடமும், அன்பில் மகேஸை நோக்கியும் ஆவேசமாகக் கத்தியுள்ளார். இந்த மிரட்டல் பேச்சு தமிழக அரசியல் மற்றும் சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டது தற்போதைய தமிழக முதல்வர் விஜய் (தமிழக வெற்றிக் கழகத் தலைவர்) என்பதும், கரூரில் ஏற்கனவே நடந்த கூட்ட நெரிசல் நிகழ்வை முன்வைத்து இந்தக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது.
இந்த சர்ச்சை பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, தவெக மற்றும் பல்வேறு தரப்பினரிடையே கடுமையான கண்டனங்களைப் பெற்றது. இது முதல்வர் விஜய்க்கு விடுக்கப்பட்ட நேரடி கொலை மிரட்டலாகக் கருதப்பட்டதால், சென்னை புழல் காவல் நிலைய போலீசார் டீட்டா சரவணன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தலைமறைவாகியுள்ள திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
