கோயம்பேடு மசூதியில் இப்படியா? தவெக ஆட்சியில் இவ்வளவு துணிச்சலா? 15 நாளில் 2வது சம்பவம்: ஜவாஹிருல்லா

சென்னை: சென்னை கோயம்பேடு ஜெய்நகர் பகுதியில் உள்ள மஸ்ஜித்-இ-ஷா நூர் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்களைத் தடுத்து, அனைத்துச் சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களுக்கும் உரிய பாதுகாப்பைத் தமிழ்நாடு அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சென்னை கோயம்பேடு ஜெய்நகர் பகுதியில் அமைந்துள்ள மஸ்ஜித்-இ-ஷா நூர் பள்ளிவாசலுக்குள் புகுந்த ஒரு நபர் அங்கு பணியிலிருந்த இமாமைத் தாக்கி, பள்ளிவாசல் பொருட்களை சேதப்படுத்திய சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.

கோயம்பேடு ஜெய்நகர் பள்ளிவாசல்

பள்ளிவாசலுக்குள் உருட்டுக்கட்டையுடன் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாகக் கைது செய்யப்பட்டுள்ள நபர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன். தமுமுக நிர்வாகிகள் மற்றும் பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகிகளும் உரிய நடவடிக்கைக்காகக் காவல்துறையிடம் வலியுறுத்தினர்.

ஒரு பதினைந்து நாட்களுக்குள் சென்னையில் பள்ளிவாசல் மீது நடைபெறும் இரண்டாவது தாக்குதல் இது என்பது மிகுந்த கவலையளிக்கிறது. கடந்த அக்டோபர் 14ஆம் தேதி சென்னை வடபழனி கங்கை அம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. தற்போது ஜெய்நகர் பள்ளிவாசலில் மற்றொரு தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

வடபழனி மசூதியில் தாக்குதல்

தொடர்ச்சியாக நடைபெறும் இத்தகைய சம்பவங்களைத் தனித்தனி நிகழ்வுகளாக மட்டும் கருதிவிட்டு, ஒவ்வொரு முறையும் குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் மனநிலையைச் சுட்டிக்காட்டி விவகாரத்தை முடித்துவிட முடியாது. இத்ததாக்குதல்களின் பின்னணி, நோக்கம், திட்டமிடல் மற்றும் சாத்தியமான தொடர்புகள் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

பள்ளிவாசல்களுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தும் அளவுக்கு சிலருக்குத் துணிச்சல் த வெ க ஆட்சியில் ஏற்படுவது ஏன்? இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? இந்தக் கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டும்.

சிறுபான்மையினர் நலன்

ஜெய்நகர் பள்ளிவாசல் தாக்குதலில் கைது செய்யப்பட்ட நபர் மீது, விசாரணையில் வெளிப்படும் ஆதாரங்கள் மற்றும் சட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நிகழாமல் தடுப்பதற்கான அவசியம் கருதி தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அவரைக் காவலில் வைக்க காவல்துறை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் எந்த மதத்தினரின் வழிபாட்டுத் தலமாக இருந்தாலும் அதன் பாதுகாப்பில் சமரசம் இருக்கக் கூடாது. பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வதைத் தடுக்கத் தமிழக அரசு உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு தாக்குதலை அலட்சியப்படுத்தினால், அடுத்த தாக்குதலுக்கு அது துணிச்சலாக மாறிவிடக் கூடாது. சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும்; சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.