தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் இரவு நேரத்தில் தப்பி ஓடிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பிரவீன்குமார், சிலம்பரசன், ராஜா சிக்கந்தர், ராஜ்குமார், மற்றும் லிங்க பிரசாத் ஆகிய 5 கைதிகள் மீண்டும் பிடிபட்டனர். மீதமுள்ளவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த சம்பவம் தேனி மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கி உள்ளது. கைதிகள் தப்பியோடியது எப்படி என சிறைத்துறை விளக்கம் அளித்திருந்தது.
அதில், “நேற்று (26.10.2026) இரவு சுமார் 10.00 மணியளவில், மூன்றாவது பிளாக்கில் உள்ள ஒரு கைதிக்கு வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளதாகக் கூறி சில கைதிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து, மூன்றாவது பிளாக்கின் பாரா காவலராகப் பணியாற்றிய ஸ்டாலின் பிரபு, அந்தக் கைதிக்கு ஏதேனும் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்காக உள்ளே சென்றார். அப்போது, கைதிகள் அவரைத் தாக்கி நிலைகுலையச் செய்து, சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களின் முயற்சியைப் பிரதான நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
இருப்பினும், கைதிகள் காவலர்களைத் தாக்கி, சாவிகளைப் பறித்து, பிரதான நுழைவாயிலைத் திறந்து கொண்டு தப்பிச் சென்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தப்பி ஓடிய கைதிகளை ட்ரோன் கண்காணிப்பைப் பயன்படுத்தி மேலும் 8 பேரை காவல்துறையினர் கண்டறிந்து பிடித்துள்ளனர். இதன் மூலம் பிடிபட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. மீதம் உள்ள 4 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இது தொடர்பாகத் தமிழகக் காவல்துறையின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தேனி கிளைச் சிறையிலிருந்து தப்பிய 13 கைதிகள் பிடிபட்டனர்.
தேனி கிளைச் சிறையிலிருந்து கைதிகள் தப்பியோடிய தகவல் கிடைத்ததும், வாகனத் தணிக்கை மற்றும் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை மற்றும் சிறப்புப் பணிக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், ட்ரோன்கள் மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகள் கண்காணிக்கப்பட்டன. இந்தத் தீவிர நடவடிக்கையின் மூலம் இதுவரை தப்பியோடிய 13 கைதிகள் பிடிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள கைதிகளைக் கண்டறிந்து பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
