டெஹ்ரான்: சவுதி அரேபியா மீது ஹவுதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஹவுதிகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறும் சவுதி அரேபியா மொத்தமாக சரண்டராகி உள்ளது. ரூ.9,518 கோடி தருகிறோம். எங்களை விட்டுவிடுங்கள் என்று சவுதி அரேபியா, ஈரான் மூலமாக ஹவுதிகளிடம் பேச்சுவார்த்தைக்கு தயாராகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சவுதி அரேபியா மீது ஏமன் ஹவுதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலை சவுதி அரேபியாவால் தடுக்க முடியவில்லை. சவுதியின் வான்வெளி தடுப்பு சாதனங்களையும் மீறி ஹவுதிகளின் தாக்குதல் தொடர்கிறது.
ஹவுதிகளின் ஏவுகணைகள், ட்ரோன்கள் சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள், எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதோடு, 300க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி தொடர்ந்து ஹவுதிகள் நடத்தும் தாக்குதலால் சவுதி அரேபியா மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது சவுதி அரேபியாவிற்கு பெரும் பிரச்சனையாக மாறி உள்ளது. இந்நிலையில் தான் சவுதி அரேபியா மொத்தமாக, ஹவுதிகளிடம் சரணடைந்துள்ளது.
ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் தருகிறோம். எங்கள் மீதான தாக்குதலை ஹவுதிகள் நிறுத்த வேண்டும் என்று சவுதி அரேபியா சார்பில் ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளது. ஹவுதிகள், ஈரான் ஆதரவில் செயல்பட்டு வருகின்றனர். இதனால் இதுதொடர்பாக ஈரானிடம், சவுதி அரேபியா வாக்குறுதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
