ஆற்றில் கிடக்கும் நூற்றுக்கணக்கான வாக்காளர் அட்டைகள்; வாக்கு திருட்டுக்கான சதி அம்பலமா?

நூற்றுக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள் ஆற்றங்கரையோரம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தேர்தல் ஆணையம், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டு, தேர்தல் முறைகேடுகளில்  ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதனிடையே, தலைமைத் தேர்தல் ஆணையர் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டு வருவதாகத் தேர்தல் ஆணையர்களே புகார் தெரிவித்திருந்தனர்.  

இது தொடர்பாக, தேர்தல் முறைகேடுகளில் தொடர்புடைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என  நடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம், கார்கோன் மாவட்டத்தின் மண்டலேஷ்வர் நகரில் உள்ள நர்மதை ஆற்றங்கரையில் மொத்தம் 343 வாக்காளர் அடையாள அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (25-10-26) ஆற்றங்கரையில் நடைபெற்ற தூய்மைப் பணியின் போது, தன்னார்வலர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் இந்த அட்டைகள் ஆற்றில் மிதப்பதையும், கரையோரம் சிதறிக் கிடப்பதையும் கண்டுபிடித்தனர். இது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதையடுத்து, இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களிலும் பரவி அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தில், வாக்கு திருட்டுக்கான சதி அம்பலமாகி இருப்பதாக பல்வேறு தரப்பினர் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், கார்கோன் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரவி நாயக் தலைமையில், கட்சி நிர்வாகிகள் மண்டலேஷ்வர் காவல் நிலையத்தில் இது தொடர்பாகப் புகார் அளித்துள்ளனர். 

இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை இணைந்து பாரபட்சமற்ற விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், ஆற்றில் இன்னும் கூடுதலான அட்டைகள் வீசப்பட்டிருக்கலாம் என்பதால், தனிப்படை அமைத்து ஆற்றில் தேடுதல் வேட்டை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

ஏற்கனவே, தேர்தல் ஆணையம் போலி வாக்காளர் அடையாள அட்டை உருவாக்குதல், எதிர்க் கட்சிகளுக்கு வாக்களிப்போரின் வாக்குகளை நீக்குதல் உள்ளிட்ட சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் ஆதாரப்பூர்வமாகப் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், தற்போது நூற்றுக்கணக்கான வாக்காளர் அட்டைகள் ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.