E20 பெட்ரோலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரசாரம் பணம் கொடுத்து நடத்தப்பட்டவை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறி உள்ளார்.
அண்மையில் மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்களை மேற்கொண்டது. அதன்படி E20 (20 சதவிதம் எத்தனால்,80 சதவிதம் பெட்ரோல் கலந்த எரிபொருள்) மற்றும் E100 (100 சதவிதம் எத்தனால்) வரையிலான எரிபொருளில் இயங்கும் பிரத்யேக வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.
ஆனால், E20 எரிபொருள் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறான கருத்துகள் வெளியாகி வருகின்றன. இவற்றில் பெரும்பான்மையான கருத்துகள் புனையப்பட்டவையாகவே இருக்கின்றன. இந்த தகவல்கள் தவறானவையே என்று பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் அறிவித்துள்ளன.
ஐஐடி ஆய்வு முடிவுகள் மற்றும் மத்திய பெட்ரோலிய அமைச்சகமும், E20 எரிபொருள் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு பாதிப்புகள் ஏற்படாது என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளன. ஆனாலும், E20 எரிபொருள் பற்றி தவறான தகவல்கள் புதிது, புதிதாக வெளியிடப்பட்டு வருகின்றன.
இப்படி வெளியாகும் தகவல்களை வெளியிடுமாறு, பணம் கொடுத்து பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக மத்திய பெட்ரோலிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சிஐஐ எனப்படும் தொழில்துறை அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு பேசி உள்ளார்.
அமைச்சர் நிதின் கட்கரி மேலும் பேசியதாவது;
3 மாதங்கள் முன்பு, E20 எரிபொருளுக்கு எதிராக பெரும் கூச்சல்கள், கோபங்கள் எழுந்தன. இப்போது ஓய்ந்துவிட்டன. காரணம், அவை பணம் கொடுக்கப்பட்டு, மேற்கொள்ளப்பட்ட பிரசாரம். கடந்த 3 ஆண்டுகளாக இந்த எரிபொருளை பயன்படுத்தியதால் வாகனங்கள் பழுதானதாக எந்த சான்றுகளும் இல்லை.
20 கோடிக்கும் அதிகமான இருசக்கர வாகனங்களும், 3 கோடிக்கும் அதிகமான கார்களும் இந்த எரிபொருளைக் கொண்டே இயங்கி வருகின்றன. சில நெடுஞ்சாலைகள் மோசமாக இருப்பதாக புகார்கள் என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அடுத்த 2 ஆண்டுகளில் நெடுஞ்சாலைகளில் பயணிப்போருக்கு எவ்வித சிரமமும் இருக்காது.
மத்திய அரசின் சாலை திட்டங்கள், புனித தலங்களுக்கான பயண நேரத்தை குறைத்து, சுற்றுலாவாசிகளின் வருகையை அதிகரித்து, வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி தந்துள்ளது. உள்கட்டமைப்பு மேம்பாடு என்பது, பொருளாதாரத்தின் முதுகெலும்பு.
இவ்வாறு அமைச்சர் நிதின் கட்கரி பேசினார்.
