“ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 41.50க்கு கொள்முதல்” – மின்சார வாரியம் முடிவு!

தமிழ்நாட்டில் மின் தேவை அதிகரித்து வரும் நிலையில், வெளிச்சந்தையில் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. அதாவது வரும் டிசம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு மே மாதம் வரை, மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை உச்ச நேரங்களில் (Peak Hours) தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தை வாங்குவதற்காக டெண்டர் கோரப்பட்டிருந்தது.

அதன்படி, மொத்தம் 2,100 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ. 41.50 என்ற விலையில் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, அக்டோபர் மாதம் 15ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டது. அப்போது, ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 37.50 வரை கொள்முதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், டிசம்பர் முதல் மே மாதம் வரை மாலை நேரங்களில் பயன்படுத்துவதற்காகக் கொள்முதல் செய்யப்பட உள்ள மின்சாரத்தின் விலை தற்போது ஒரு யூனிட்டுக்கு ரூ. 41.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதத்திற்கும் தேவையான மின்சார அளவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, டிசம்பர் மாதத்தில் 361 மெகாவாட், ஜனவரி மாதத்தில் 361 மெகாவாட், பிப்ரவரி மாதத்தில் 357 மெகாவாட் என மாதந்தோறும் தேவைக்கேற்ப மின்சாரம் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், உச்ச நேரங்களில் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அதிக விலையில் மின்சாரம் வாங்க முடிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.