பஞ்சாப் சட்டசபைக்கு மது பாட்டிலுடன் வந்து முதல்வர் பகவந்த் மானை விமர்சித்த பா.ஜ., தலைவர்

சண்டிகர்: ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், டில்லி விமான நிலையத்தில், சமீபத்தில், மூன்று மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நிலையில், அம்மாநில சட்டசபை வளாகத்துக்கு விலை உயர்ந்த மது பாட்டிலை கையில் ஏந்தியபடி இன்று (அக்.,27) வந்த பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு, ‘‘டில்லி விமான நிலையத்தில், இந்த மது பாட்டிலை தான், முதல்வர் பகவந்த் மானிடம் இருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்,’’ என, குற்றஞ்சாட்டினார்.

பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்தாண்டு பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிசுக்கு சென்று, கடந்த வாரம் நாடு திரும்பிய முதல்வர் பகவந்த் சிங் மானை, டில்லி விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

அவர் மூன்று மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்ததாகவும், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ‘என்னை அவமதிக்கவே சுங்கத்துறையினர் தடுப்புக் காவலில் வைத்தனர். சோதனையில் எதுவுமே கிடைக்கவில்லை’ என, முதல்வர் பகவந்த் சிங் மான் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், சண்டிகரில் உள்ள பஞ்சாப் சட்டசபை வளாகத்துக்கு விலை உயர்ந்த மது பாட்டிலை கையில் ஏந்தியபடி, பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு இன்று வந்தார். அவர் வைத்திருந்த நீலம் மற்றும் வெள்ளை நிறத்திலான பீங்கான் வடிவிலான பாட்டில், வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் அதிநவீன பிரீமியம் ரக, ‘டெக்கிலா’ வகை மதுபானமான, ‘கிளாஸ் அசுல் ரெபோசாடோ’ -என, கூறப்படுகிறது. நம் நாட்டில் இதன் விலை, 80,000 ரூபாய்.

செய்தியாளர்களிடம், ரவ்நீத் சிங் பிட்டு கூறுகையில், ‘‘டில்லி விமான நிலையத்தில், கடந்த வாரம் முதல்வர் பகவந்த் சிங் மானிடம் சிக்கிய அதே மது பாட்டில் தான் இது. ஒட்டுமொத்த பஞ்சாபையே ஆம் ஆத்மி சூறையாடி விட்டது. மாநிலத்தில் ஐந்து ஆண்டுகளில் எந்த உருப்படியான பணிகளும் நடக்காததற்கு, மது போதையில் இருக்கும் முதல்வர் பகவந்த் சிங் மானே சாட்சி,’’ என்றார்.

Source link