சென்னை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களுக்காக மேற்கொள்ளப்படும் வசதிகள் குறித்து கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய, பஞ்சாப் – -ஹரியானா உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் உயர்மட்ட குழு அமைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மனோகரன் பிறப்பித்த உத்தரவு:
இரு தனி நபர்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளால், கோவிலின் சொத்துக்கள் எவ்வாறு அறங்காவலர்களின் கவனக்குறைவாலும், அறநிலையத் துறை மெத்தனப் போக்காலும் ஆக்கிரமிக்கப்பட்டு சுரண்டப்படுகின்றன என்ற உண்மைகள், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டன.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக, அம்மணி அம்மான் மடத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் இருந்தால், அவர்களை உடனே அப்புறப்படுத்தி, இடத்தை அளந்து, அருணா சலேஸ்வரர் கோவில் செயல் அலுவலர், சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும்.
மடத்துக்குள் அமைந்துள்ள அம்மணி அம்மான் கோவிலை புதுப்பிக்க வேண்டும். அந்தப் பகுதியில் காலியாக உள்ள, 25 ஆயிரம் சதுர அடி நிலத்தில், பக்தர்கள் வளாகம் கட்ட வேண்டும். இந்த கட்டுமானத்தை, 2027ம் மார்ச் இறுதிக்குள் தொடங்க வேண்டும்.
இந்த உத்தரவுகளை அமல்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்து, நவ., 10ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த உத்தரவுகளை அமல்படுத்துவதை கண்காணிக்க, பஞ்சாப் -– ஹரியானா உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.கண்ணன் தலைமையில், அறநிலையத் துறை ஓய்வுபெற்ற இணை கமிஷனர் எஸ்.ஜெயராமன் ஆகியோர் அடங்கிய உயர்மட்ட குழுவை அமைக்கிறோம்.
உயர்மட்ட குழுவுக்கு மாவட்ட நிர்வாகமும், கோவில் நிர்வாகமும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
