– நமது நிருபர் –
தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது நடவடிக்கையை தொடர்ந்து, பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர்கள் சிலர் கலக்கம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி.மு.க., ஆட்சியில், தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி, பணம் வசூலித்ததாக எழுந்த புகாரில், அன்பில் மகேஷை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கையால், பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள, தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சிலர், எந்த நேரத்திலும் தங்கள் மீது கைது நடவடிக்கை பாயலாம் என்ற அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டதால், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்துள்ளார். அதனால், நேற்று அவர் அறிவாலயத்திற்கு வரவில்லை. ஆழ்வார்பேட்டை வீட்டில் முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், மூத்த வழக்கறிஞர்களுடன், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்தார்.
சட்டசபையில் முதல்வர் விஜய் பேசுகையில், ‘மூன்று ஊழல் கோப்புகள் என் மேஜையில் உள்ளன. உரிய நேரத்தில் அவற்றை வெளியிட்டு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, ‘ஆதாரங்கள் இருந்தால் நடவடிக்கை எடுங்கள்’ என, சவால் விட்டார். அந்த சவாலை எதிர்கொள்ளும் வகையில், சமீபத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன், ‘முதல்வரின் மேஜையில் உள்ள ஊழல் தொடர்பான கோப்புகள் விரைவில் வெளியிடப்படும்’ என்றார்.
இந்நிலையில், ஊழல் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள அன்பில் மகேஷ், தி.மு.க.,வில் சாதாரண நிர்வாகி அல்ல. இளைய தலைமுறை முகங்களில் ஒருவர். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு நெருக்கமானவர். அவர் கைது செய்யப்பட்டிருப்பது, மேல்மட்டத்திற்கு வைக்கப்பட்ட குறியாக பார்க்கப்படுகிறது. அதை எப்படி எதிர்கொள்வது என, தி.மு.க., தலைமை ஆலோசித்து வருகிறது.
நகராட்சி நிர்வாக துறையில் அதிகாரிகள் நியமன முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட நேரத்தில், நேரு தொடர்பான வழக்கிலும், அவருக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு வெளியாகிருப்பது, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
மேலும், முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, எ.வ.வேலு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் தி.மு.க., துணை பொதுச்செயலர் ஆ.ராஜா ஆகியோர் மீதும், இந்த ஆட்சியில் வழக்குகள் போடப்பட்டு உள்ளன. அந்த வழக்குகளில் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளதால், சட்ட ரீதியாக பாதுகாப்பு தேடுவதில் தீவிரம் காட்டுமாறு, அவர்களை கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது.
