“விமர்சியுங்கள், ஆராயுங்கள்…சோதித்துப் பாருங்கள்” – விமர்சனத்துக்கு அமைச்சர் கீர்த்தனா பதிலடி!

தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, சமீபத்தில் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். அப்போது தங்க நகைகளை அணிந்திருந்தார். இது தொடர்பாக புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இதனால் அவர் விலை உயர்ந்த நகைகளை அணிந்து சாமி தரிசனம் செய்வதாக சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தது.

இந்த விமர்சனங்களுக்கும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நான் ஒரு சாதாரணப் பெண்… அதனால்தானோ என்னவோ, என் ஒவ்வொரு சொல்லையும், செயலையும், ஏன் என் தங்கத்தின் தரத்தைக்கூடச் சோதிக்கத் துடிக்கிறார்கள். இனி நான் பேசும் ஒவ்வொரு பேச்சும் வைரலாகும்போது, அதையும் ஆய்வகத்தில் வைத்துப் பிரித்துப் பிரித்து ஆராய்வார்கள். ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் தேடுவார்கள்!

ஆனால் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்… தங்கத்தை எத்தனை முறை சோதித்தாலும், அதன் மதிப்பு குறைவதில்லை! என் பின்னால் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அண்ணா அவர்களின் ஆதரவும், என் மீது அன்புகொண்ட மக்களின் நம்பிக்கையும் இருக்கிறது. விமர்சியுங்கள்… ஆராயுங்கள்… சோதித்துப் பாருங்கள். என் வார்த்தைகளைப் பிரித்துப் பார்க்கலாம்; என் தன்னம்பிக்கையைப் பிரிக்க முடியாது. என் தங்கத்தைச் சோதிக்கலாம்; என் துணிச்சலைச் சோதிக்க முடியாது” என்று கூறினார்.