சமீப காலங்களில் மக்களிடையே யுபிஐ பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டில் மக்களிடையே பணப்புழக்கமும் பெருமளவில் அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சூழலில், ஒன்றிய அரசு மீண்டும் புதிய 1000 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்திற்குக் கொண்டுவர இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த 1000 ரூபாய் நோட்டுகள் மஞ்சள் நிறத்தில் இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகின. இந்த 1000 ரூபாய் நோட்டுகள் வருகின்ற நவம்பர் 15 முதல் புழக்கத்திற்கு வரும் கூறப்பட்டது. சமீப காலங்களில் மக்களிடையே மீண்டும் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதால் அரசு இந்த முடிவிற்கு வந்திருக்கலாம் என்று சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த சூழலில், இது குறித்து ஒன்றிய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 1000 ரூபாய் நோட்டுகள் அரசு வெளியிட உள்ளதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. அதில் எந்தவித உண்மையும் இல்லை. அதிகாரப்பூரவமற்ற தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு புழக்கத்திலிருந்த ரூ.1000 மற்றும் ரூ.500 ரூபாய் நோட்டுகளைச் செல்லாததாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன. ஆனால், தற்போது ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இல்லாமல் போனது. இந்நிலையில், 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வருவதாக வெளியான தகவல் மக்களிடையே மிகுந்த கவனம் பெற்றது. எனினும், அதில் உண்மை இல்லை என்று ஒன்றிய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
