அ.இ.பு.த.ம.மு.கவில் இருந்து சசிகலா அதிரடி நீக்கம்; கட்சித் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு!

சமீபத்தில் நடந்த தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (அ.இ.பு.த.ம.மு.க) என்ற கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா இணைந்து போட்டியிட்டார். அதாவது எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான மதுரையைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர் கடந்த 2016-2017 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வந்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடனான தொடர் முரண்பாடுகளைத் தொடர்ந்து சக்கரவர்த்தியுடன் பேசிய சசிகலா, அ.இ.பு.த.ம.மு. கட்சியை பயன்படுத்துக் கொள்ள அனுமதி கோரியிருந்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியில் முடிந்ததால், அ.இ.பு.த.ம.மு.கவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ராமதாஸுடன் கூட்டணி அமைத்து தென்னந்தோப்பு சின்னத்தில் சட்டமன்றத் தேர்தலில் சசிகலா போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார்.

இந்த நிலையில், அ.இ.பு.த.ம.முகவில் இருந்து சசிகலாவை நீக்குவதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் சக்கரவர்த்தி அதிரடியாக அறிவித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அ.இ.பு.த.ம.முகவின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சக்கரவர்த்தி, “அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எனக் கூறப்படும் சசிகலாவை நீக்குவதாக நாங்கள் முடிவு செய்துள்ளோம். நடந்து முடிந்த 2026 தேர்தலில் எங்களது கட்சியில் அவர் பணியாற்றுகிறேன் என்று கூறி சேர்ந்தார். அத்துடன் கட்சியின் பொறுப்புகளையும் அவர் ஏற்று கொண்டார். கட்சியை வழிநடத்துவேன் என்று கூறினார், ஆனால் அதன்படி செய்யவில்லை. கட்சியின் வேட்பாளர்களை அறிவித்தார்.

தேர்தல் முடிந்த பிறகு கட்சியை வழிநடத்துவோம் என்று கூறிவிட்டு வேட்பாளர்கள், தொண்டர்கள் என யாரையும் சந்திக்கவில்லை. நானும் அவரை சந்திக்க வேண்டும் என்று எத்தனையோ முறை கேட்டுவிட்டேன். ஆனால் அங்கே எந்தவிதமான அனுமதியும் கிடையாது யாரும் வரவேண்டாம், கேட்டு சொல்கிறேன் கேட்டு சொல்கிறேன் என்று கூறிவிட்டார்கள். ஆனால் பார்ப்பதற்கு அனுமதி இல்லை. தேர்தலுக்காக மட்டும் அவர் எங்களை பகடைக்காயாக பயன்படுத்திக் கொண்டார் என எங்களுக்கு புரிகிறது. நான் கழகத் தொண்டர்களுடன் கலந்து ஆலோசித்து அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக முடிவு செய்துள்ளோம். வரும் பிப்ரவரி மாதம் நாங்கள் முறையாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பி அவரை நீக்கிவிடுவோம். இதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது” என்று கூறினார்.