‘அர்னாப்’ புயலால் புதுச்சேரி பிராந்தியம் ஏனாமில் கடும் பாதிப்பு

புதுச்சேரி: வங்கக் கடலில் உருவான ‘அர்னாப்’ அதி தீவிரப் புயல், புதன்கிழமை அதிகாலை ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரியின் ஏனாம் கடலோரப் பகுதிகளில் கரையை கடக்கத் தொடங்கியது. இதனால் ஏனாம் பகுதி கடும் பாதிப்படைந்து உள்ளது.

வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல், இன்று அதிகாலை 1.20 மணிக்கு ஆந்திரா அருகே கரையைக் கடந்தது. கரையைக் கடக்கும் போது மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. சில இடங்களில் 150 கி.மீ வரை பதிவானது.

ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடா அருகே கோதாவரி ஆறு கடலில் கலக்கும் பகுதியில் புதுவை மாநிலத்தின் ஏனாம் பிராந்தியம் உள்ளது. புயல் காரணமாக ஏனாமில் அதி கனமழை பெய்தது.

புயல் காரணமாக ஏற்பட்ட 1 முதல் 2 மீட்டர் உயர புயல் அலை மற்றும் தொடர் கனமழையால் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோரம் கடல் நீர் உள்ளே புகுந்ததால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. காற்று பலமாக வீசியதால் ஏனாமின் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

புயலின் தாக்கத்தால் ஏனாம் சாவித்திரி நகரில் கடல் நீர் 3 முதல் 4 அடி வரை உயர்ந்து, கிராமம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. அங்கு அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமின் தரைத்தளத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் நிவாரண முகாமில் தங்கியுள்ள மக்கள் தரைத்தளத்திலிருந்து முதல் தளத்திற்கு மாற்றப்பட்டனர்.

ஏனாம் பகுதியில் பல இடங்களில் மரங்களும் மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்ததால், சாவித்திரி நகருக்குச் செல்லும் வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால், தாள்ளரேவு மற்றும் கடிமோகா கிராமங்கள் வழியாக ஆந்திரப் பிரதேசம் சுற்றி சாவித்திரி நகரை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் சென்றடைந்தார்.

தொடர்ந்து நிவாரண முகாமில் தங்கிய மக்களை சாவித்திரி நகர் மக்களைப் பாதுகாப்பாக கிரியம்பேட்டிற்கு அழைத்துச் செல்ல பிராந்திய நிர்வாக அதிகாரி சிவராஜ் மீனா மற்றும் பிற அரசு அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கைகளை எடுத்தனர்.

ஏனாமில் இன்று காலை நிலவரப்படி பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. காலை 7.30 மணிக்கு கிழக்கு திசையில் இருந்து மணிக்கு 40 கி.மீ முதல் 71 கி.மீ வரை பலத்த காற்று வீசுகிறது. இன்று முழுவதும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சுமார் 30.60 மி.மீ மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Source link