ரயில் பயணத்தின் போது இதைச் செய்யாதீங்க; இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை சார்ஜிங் பாயிண்டுகள் கட்: ரயில்வே உத்தரவு

ரயில் பயணங்களின் போது இரவு நேரங்களில் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தவிர்க்கும் வகையில், அனைத்து ரயில் பெட்டிகளிலும் இரவு 11:00 மணி முதல் காலை 05:00 மணி வரை மொபைல் சார்ஜிங் பாயிண்டுகளுக்கான மின் இணைப்பை கட்டாயமாகத் துண்டிக்க வேண்டும் என்று இந்திய ரயில்வே வாரியம் அனைத்து மண்டல ரயில்வேக்களுக்கும் அதிரடி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.   

தென்கிழக்கு ரயில்வே (எஸ்.இ.ஆர்) மண்டலத்தில், குறிப்பிட்ட அந்த இரவு நேரத்தில் ரயில் பணியாளர்கள் சார்ஜிங் பாயிண்டுகளுக்கான மின்சாரத்தை அணைக்கத் தவறியதால், பயணி ஒருவர் சார்ஜ் செய்துகொண்டிருந்த ‘பவர் பேங்க்’ (Power Bank) அதிக வெப்பமடைந்து புகையுடன் வெடித்த சம்பவம் அண்மையில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை தீவிரமாக எடுத்துக்கொண்ட ரயில்வே நிர்வாகம், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முந்தைய பாதுகாப்பு உத்தரவுகளைத் தீர்க்கமாக அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள உத்தரவில், எந்தவொரு காரணத்தைக் கொண்டும் இந்த நேரத்தில் மின் விநியோகத்தில் விலக்கு அளிக்கக் கூடாது எனவும், ரயில்வே பணியாளர்கள் இதனை முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய அவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களையும் பயிற்சியையும் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த உத்தரவு சரியாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மட்டத்தில் திடீர் ஆய்வுகளை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.   

இரவு நேரங்களில் மின்சாரப் பெட்டிகள் அதிக வெப்பமடைந்து தீ விபத்துகள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்குப் பயணிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், இரவு நேரப் பயண திட்டமிடலின் போது இதனை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Source link