தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலமாக, திருப்பதி தேவஸ்தானத்தின் அனுமதி பெற்று, பெருமாளை விரைவாக தரிசனம் செய்யும் சேவையை மீண்டும் தொடங்க தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ் குமாரிடம் கோரிக்கை அளித்தபின் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரியின் சட்டமன்ற அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ தலைமை செயலகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமாரை சந்தித்து தொகுதி தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வழங்கினார்.
அப்போது திருப்பதி ஆன்மீக சுற்றுலா பயணம் குறித்த ஒரு கோரிக்கை ஒன்றையும் நினைவூட்டினார். தெய்வீக பக்தர்கள் பேரவையின் நிறுவனத் தலைவர் ஜெமினி ராதா (சிதம்பரம்), தன்னிடம் கொடுத்த கோரிக்கை மனு குறித்து அமைச்சரிடம் விவாதித்தார்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலமாக, திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அனுமதி பெற்று, திருமலா ஸ்ரீ வெங்கடேச பெருமாளை விரைவாக தரிசிக்க; சென்னையிலிருந்து பக்தர்களை கட்டணத்துடன் நாள்தோறும் பேருந்துகளில் திருப்பதிக்கு அழைத்து சென்று வந்தனர்.
கடந்த 2025ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, மேற்கண்ட திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்திடுமாறு கோரிக்கை விடுத்தார்.
இதன் மூலம் தமிழ்நாடு சுற்றுலா கழகத்திற்கும் வருமானம் கிடைக்கும் என்பதையும் அப்போது அமைச்சரிடம் எடுத்துக் கூறினார். இது ஒரு நல்ல கோரிக்கை என்றும், முதல்வரின் கவனத்திற்கு உடன் எடுத்துச் செல்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இத்திட்டம் மீண்டும் செயல்பாட்டுக்கு வருகின்ற பொழுது தமிழ்நாட்டைச் சேர்ந்த திருப்பதி கோயில் பக்தர்கள் பெருமளவு பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
