வரலாற்றில் முதன்முறையாகப் பெண்களுக்கான ’இலவச பேருந்து பயணத் திட்டம்’ தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. சாதாரண மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்த இந்த திட்டம், இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியது. இந்நிலையில், தமிழகத்தைத் தொடர்ந்து இந்தியா முழுவதிலும் உள்ள பல மாநிலங்கள், இந்த திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில், நமது அண்டை மாநிலமான கேரளத்தில், தற்போது ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் அரசு, பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
கடந்த ஜூன் மாதத்தில், ’பிரியதர்ஷினி’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால், பெண்கள் மற்றும் திருநங்கைகள் பலன் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், பெண்களுக்கான இலவச பயணத் திட்டத்தால், தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாகவும், இதை ஈடுகட்டும் வகையில் தங்களுக்கு அரசு சலுகை அளிக்க வேண்டும் என்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள், கடந்த சில மாதங்களாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும், அரசு தரப்பிலிருந்து இந்த கோரிக்கைகள் சம்பந்தமாக எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து, நவம்பர் 3ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகத் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதனால், தனியார் பேருந்துகள் எதுவும் ஓடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதால் தனியார் பேருந்துகளுக்குக் கடந்த 3 மாதங்களில் ரூ.120 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
