அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று (28-10-26) மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எங்களுடைய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாள்தோறும் மக்களுடைய பிரச்சனையை எடுத்துச் சொல்லி வருகிறார். தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்த ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எட்க்கவில்லை. இந்த 6 மாதத்தில் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு இந்த அரசாங்கம் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.
ஜென்சி தலைமை என்று சொல்லிக் கொண்டு கையாளகாத முதலமைச்சர், ஒரு பொம்மை முதலமைச்சராக இருக்கிறார். எதைப் பற்றியும் அவர் கவலைப்படுவதே இல்லை, எதைப் பற்றி அவர் வாய் திறக்க மாட்டிக்கிறார். இந்த ஆட்சியில் எதை எடுத்தாலும் டெண்டர் விடுவது அதை திரும்ப வாபஸ் பெறுவது என நடக்கிறது. இது பல ஊழலுக்கு வழிவகுக்கிறது. இந்த ஆட்சியில் விலைவாசி உயர்வு அதிகமாக இருக்கிறது. இதற்கு முதலமைச்சர் வாயே திறக்கவில்லை. அதே போல், நாள்தோறும் சிறுபிள்ளைகள் கடத்தல், கொலை நடக்கிறது. போலீஸ் முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லை. இந்த ஆட்சியைப் பற்றி சில தொலைக்காட்சி தூக்கி கொண்டாடுகிறார்கள். ஆனால் இது நல்லதுக்கு அல்ல. மாற்றத்தை கொண்டு வந்த இளைஞர்கள், மாணவர்கள் என அனைவரும் இந்த ஆட்சியில் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.
ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் காரணம் என சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜீவ் சொல்கிறார். இது உலகமகா கண்டுபிடிப்பு. இதை சொன்ன அவருக்கு நோபல் பரிசே கொடுக்கலாம். நான் எகிப்தை ஈஜ்புத்-னு சொன்னதுக்கு என்னைய எப்படிலாம் ஓட்டுனீங்க? அதே போல் தெர்மாக்கோல்னுலாம் சொன்னீங்களே… ஃபேஸ்புக்லாம் என்னைய தெர்மாக்கோல்னு தான் ஓட்டுவாங்க.. தெர்மாக்கோல் நான் போடல, அதிகாரிகள் சொல்லி போட்டது…என்னைய ஓட்டோ ஓட்டுனீங்க.. இதுக்குலாம் எதுவும் சொல்ல மாட்டீங்களாபா? அட என்னங்கப்பா போங்கப்பா.. அழுவ விடுறீங்கப்பா..,” எனக் கலகலப்பாகப் பேசினார்.
இதையடுத்து தனுஷின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “தான் இருக்கும் போதே எல்லாவற்றையும் கொடுக்கும் அந்த ஈகை குணம் எம்.ஜி.ஆருக்கு மட்டும் தான் இருக்கிறது. ஒரு புரட்சித் தலைவர் தான் நாட்டில் உருவாக முடியும். ஒருத்தர் பிறந்தார், இனி எவனும் அவரை மாதிரி பிறக்க போவது இல்லை, பிறந்ததும் இல்லை. அதனால் எத்தனை நடிகர் வந்தாலும் அவர்களுக்கு அந்த மனசு இருக்காது. விஜய்காந்த்துக்கு மட்டும் அந்த ஈகை குணம் இருந்தது. ஆனால் இப்போது முதலவர் உள்பட எந்த நடிகரும், ஏழை மக்கள் இன்னல் படும் போது எதுவும் செய்தது கிடையாது. இந்த ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், ஆட்சிக்கு வரலாம். அதைப் பற்றி எங்களுக்கு விமர்சனம் இல்லை. ஆனால் தனுஷ் வருவதை பார்த்து விஜய் கட்சிக்காரர்கள் தான் பயப்படுகிறார்கள். அதனால் தனுஷோ, சிவகார்த்திகேயனோ வரட்டுமே, நல்லது தானே…” என்று கூறினார்.
