ஏழைப் பெண்களுக்கு இலவச கறவை மாடுடன் ஆவின் உறுப்பினர் வாய்ப்பு: தமிழக அரசின் சூப்பர் திட்டம்

தமிழகத்தில்  கிராமப்புற பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், பால் உற்பத்தியை அதிகரிக்கவும் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டு பட்ஜெட் அறிவிப்பின்படி, ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த 10,000 ஏழைப் பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்திற்காக ரூ.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கிராமப்புற வறுமை ஒழிப்பு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பு மற்றும் பெண் தொழில்முனைவோரை உருவாக்குவதை ஒரே சமயத்தில் இலக்காகக் கொண்டு இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டின் பால் உற்பத்தி 2020-ஆம் ஆண்டில் 87.59 லட்சம் டன்னாக இருந்த நிலையில், 2024-ஆம் ஆண்டில் 1.08 கோடி டன் என்ற உச்சத்தை எட்டியுள்ளது. இந்த வளர்ச்சிக்கு ஆவின் அமைப்பின் மாநில அளவிலான கட்டமைப்பு முக்கியப் பங்காற்றுகிறது.

இத்தித்தின் மூலம் பயனடையும் கிராமப்புறப் பெண்கள், ஆவின் முதன்மைப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் நேரடி உறுப்பினர்களாக இணைக்கப்படுவர். இதன் மூலம், கறக்கப்படும் பாலுக்கான தொகை இடைத்தரகர்களின் தலையீடின்றி நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு, கிராமப்புறப் பெண்களுக்குத் தினசரி பணப்புழக்கம் உறுதி செய்யப்படும்.

இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பயனாளிக்கும் குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 8 லிட்டர் பால் கறக்கும் திறன் கொண்ட ஆரோக்கியமான, அதிக பால் தரும் கலப்பினக் கறவை மாடு வழங்கப்படும்.

முறையான கால்நடை பராமரிப்பு மூலம், ஐந்தாண்டு காலத்தில் ஒவ்வொரு மாடும் 3 முதல் 4 கன்றுகளை ஈனும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கிராமப்புறப் பெண்களுக்கு நீண்ட காலச் சொத்து உருவாக்கத்திற்கும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.

கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 18 முதல் 60 வயது வரை உள்ள ஏழைப் பெண்கள் மட்டுமே இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

இதர நிபந்தனைகள்:

விண்ணப்பதாரர் குறிப்பிட்ட கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.

சொந்தமாக கறவை மாடுகள் இல்லாதவராகவும், 1 ஏக்கருக்கு மேல் நிலம் இல்லாதவராகவும் இருக்க வேண்டும்.

கணவனை இழந்தோர், ஆதரவற்ற பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.

தகுதியுள்ள பெண்கள் தங்கள் கிராம ஊராட்சி மன்ற அலுவலகம் அல்லது கால்நடை பராமரிப்புத் துறை நடத்தும் முகாம்கள் மூலம் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

Source link