இதய மாற்று அறுவை சிகிச்சை: சாமுண்டீஸ்வரிக்கு இதயம் கிடைக்குமா? தேடி அலையும் கார்த்திக்

கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்: உயிருக்குப் போராடும் சாமுண்டீஸ்வரி… இதயத்தைத் தேடி அலையும் கார்த்திக்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ சீரியலில், அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், சாமுண்டீஸ்வரியின் உயிரைக் காப்பாற்ற கார்த்திக் போராட இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

ஜெயிலில் இருந்து வெளியே வரும் பாட்டி, நேராக மருத்துவமனைக்குச் செல்கிறார். அங்கே ஐசியூ-வில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் சாமுண்டீஸ்வரியைப் பார்த்ததும் கண்ணீர் விட்டு அழுகிறார். அறுவை சிகிச்சை முடிந்துவிட்டாலும், சாமுண்டீஸ்வரியின் இதயம் மிகவும் பலவீனமாக இருப்பதால், உடனடியாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம் கிடைத்தால் மட்டுமே சாமுண்டீஸ்வரியைக் காப்பாற்ற முடியும் என்ற தகவல் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. இதற்கிடையில், கல்யாணக் கோலத்தில் மருத்துவமனைக்கு வரும் ஸ்வாதி, இந்த நேரத்தில் இப்படியொரு பிரச்சினை வந்துவிட்டதே என்று வேதனைப்படுகிறார். அப்போது அங்கிருக்கும் நர்ஸ், அனைவரையும் வெளியே செல்லும்படி கூறுகிறார்.

மறுபக்கம், சந்திரா மஹாலில் இருக்கும் சந்திரகலாவிடம், மருத்துவமனை நர்ஸ் சாமுண்டீஸ்வரியின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகச் சொல்கிறார். இதைக் கேட்டதும் சந்திரகலா நேராகக் காவல் நிலையத்துக்குச் சென்று சிவனாண்டியைச் சந்திக்கிறார். அப்போது, “சாமுண்டீஸ்வரிக்கு இதயம் கிடைக்காது. அவள் சாகத்தான் போகிறாள். அவளுடைய இடத்தில் உன்னை உட்கார வைக்கிறேன்” என்று தன்னுடைய கொடூரமான திட்டத்தைப் பகிர்ந்துகொள்கிறார். 

சாமுண்டீஸ்வரியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்திலும், சந்திரகலா தனது பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிடுவதாக இல்லை. இதற்கிடையில், மருத்துவர் செழியனைச் சந்திக்கும் கார்த்திக் மற்றும் இளையராஜா, சாமுண்டீஸ்வரியின் நிலைமையைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்கிறார்கள். உடனே அவருக்கு இதயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தீவிரமாக முயற்சி செய்கிறார்கள்.

கார்த்திக் தனது அண்ணன் அருணுக்குப் போன் செய்து நடந்த விஷயங்களைச் சொல்கிறார். அப்போது அருண், “உன்னை இவ்வளவு கொடுமைப்படுத்திய பிறகும், நீ அவர்களுக்காக இவ்வளவு தூரம் நிற்கிறாயே!” என்று நெகிழ்ந்து பேசுகிறார். ஆனால், கார்த்திக்கோ, “இப்போ இதையெல்லாம் பேசுறதுக்கு நேரமில்லை. அத்தையைக் காப்பாத்தணும்” என்று சொல்லிவிட்டு, அருண் மற்றும் இளையராஜாவுடன் சேர்ந்து இதயத்தைத் தேடும் முயற்சியில் இறங்குகிறார்.

மருத்துவமனையில் சாமுண்டீஸ்வரியின் நிலைமை மோசமாகிக்கொண்டிருக்க, மறுபக்கம் பாட்டி, ரோகிணி, ரேவதி மற்றும் ஸ்வாதி ஆகியோர் கோயிலுக்குச் செல்கிறார்கள். அங்கே சாமுண்டீஸ்வரி மீண்டும் நலமாக வேண்டும், அவருக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்று மனமுருகி வேண்டிக்கொள்கிறார்கள்.
இப்படியொரு இக்கட்டான சூழலில், சந்திரகலா தனது அடுத்த சதியை அரங்கேற்றுகிறார். நர்ஸின் உதவியுடன் யாருக்கும் தெரியாமல் ஐசியூ-வுக்குள் நுழைகிறார். அங்கே நினைவில்லாமல் படுத்திருக்கும் சாமுண்டீஸ்வரியைப் பார்த்து, “உன்னோட வாழ்க்கை இத்தோட முடிஞ்சது. இனிமேல் உன்னோட சொத்து, உன்னோட ஸ்தானம் எல்லாமே எனக்குத்தான்!” என்று வன்மத்துடன் பேசுகிறார்.

ஏற்கெனவே உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் சாமுண்டீஸ்வரிக்கு இப்போது சந்திரகலாவால் இன்னொரு ஆபத்தும் காத்திருக்கிறது. சாமுண்டீஸ்வரியைக் காப்பாற்றுவதற்காக கார்த்திக் சரியான நேரத்தில் இதயத்தைக் கண்டுபிடிப்பாரா? சந்திரகலாவின் சதித் திட்டத்தை முறியடிப்பாரா? உயிருக்குப் போராடும் சாமுண்டீஸ்வரி மீண்டும் கண் விழிப்பாரா? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

அயலி சீரியல் எபிசோட் அப்டேட்: கபிலன் மீது இந்திராணிக்கு வந்த சந்தேகம்… என்கவுண்டருக்குத் தயாராகும் சிவா‌!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘அயலி’ சீரியலில், அடுத்தடுத்து நடக்கும் அதிரடி திருப்பங்களால் கதை விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது.
அயலியைத் தனியாக அழைத்துப் பேசும் இந்திராணி, கபிலன் பற்றித் தனக்கு வந்த சந்தேகத்தைச் சொல்கிறார். “கபிலனைச் சின்ன வயசுல இருந்தே நான்தான் வளர்த்தேன். ஒருமுறை ஸ்கூல்ல பேரண்ட்ஸ் மீட்டிங் நடந்தப்போ, நீதான் எனக்கு முதல் அம்மான்னு சொல்லி என்னைத்தான் கூட்டிட்டுப் போனான். அப்படிப்பட்டவன் இப்போ என்கிட்ட முதல் முறையா பொய் சொல்லியிருக்கான். அவன் ஏதோ பெரிய பிரச்சினையில மாட்டியிருக்கான்னு என் மனசுக்குத் தோணுது” என்று கூறுகிறார்.

மேலும், “இந்த விஷயம் சிவாவுக்குத் தெரியவே கூடாது. வீட்டுல இருக்கிற யாருக்கும் தெரியாம நீதான் அவனைக் காப்பாத்தணும்” என்று அயலியிடம் கேட்கிறார். அதோடு, தன் மீது சத்தியம் செய்யச் சொல்லி அயலியைக் கட்டாயப்படுத்துகிறார். வீட்டில் இருப்பவர்களுக்குத் தெரிந்தால் எல்லோரும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள் என்று நினைக்கும் அயலியும் வேறு வழியில்லாமல் சத்தியம் செய்து கொடுக்கிறார்.

இப்படி இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே விஜயகுமாரிடமிருந்து அயலிக்கு அவசர அழைப்பு வருகிறது. உடனே அம்பத்தூர் காவல் நிலையத்துக்கு வரச் சொல்ல, பிரின்சிபால் அழைப்பதாக வீட்டில் பொய் சொல்லிவிட்டு அவசர அவசரமாகக் கிளம்புகிறார். அங்கே போய்ப் பார்த்தால், காவல் நிலையமே போர்க்களம் மாதிரி இருக்கிறது. காவலர்கள் பலரும் துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார்கள். அவர்களுக்கு உடனடியாகத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைப் பார்த்த இந்திராணி அதிர்ச்சியில் உறைந்து போகிறார்.

காவல் நிலையத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க, போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்கிறார்கள். அப்போதுதான் கபிலன் போதையில் காவலர்களிடம் தகராறு செய்தது தெரிய வருகிறது. அப்போது, “உங்களுக்கு எவ்வளவு லஞ்சம் வேணும்னாலும் தர்றேன். எங்க அக்கா யாருன்னு தெரியுமா? நாங்க அந்த ஆயுத வண்டியைத் தூக்கிட்டா உலகத்துலயே பெரிய பணக்காரங்களாகிடுவோம்” என்று கபிலன் உளறிக்கொண்டிருக்கிறான்.

அந்த நேரத்தில் திடீரென உள்ளே நுழையும் வர்மாவும் அவனுடைய ஆட்களும், அங்கிருந்த காவலர்களைச் சரமாரியாகச் சுட்டுவிட்டு, கபிலனை அங்கிருந்து கடத்திச் செல்கிறார்கள். இதைப் பார்த்து போலீசார் அதிர்ச்சியடைகிறார்கள்.
காவல் நிலையத்தில் நடந்த இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட சிவா கடும் கோபமடைகிறான். பல போலீசாரைத் துப்பாக்கியால் சுட்ட கபிலனை என்கவுண்டர் செய்தே தீருவேன் என்று உறுதியாகச் சொல்கிறான். இதைக் கேட்டு அதிர்ச்சியடையும் அயலி, “அவன் உங்க அக்கா பையன். நீங்க இப்படிச் செஞ்சா அக்கா என்ன நினைப்பாங்க?” என்று சொல்லி சிவாவைத் தடுக்க முயற்சி செய்கிறார்.

ஆனால் சிவாவோ, “அக்காவா இருந்தாலும் சரி, பிள்ளையா இருந்தாலும் சரி… அவன் ஒரு குற்றவாளி. அவனுக்குத் தண்டனை கொடுக்கிறதை என் அக்காவே தப்பா நினைக்க மாட்டாங்க” என்று ஆவேசமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறான். ஒருபக்கம் கபிலனைக் காப்பாற்றுவதாக இந்திராணிக்குச் செய்து கொடுத்த சத்தியம்… இன்னொரு பக்கம் குற்றவாளியான கபிலனை என்கவுண்டர் செய்யத் துடிக்கும் கணவன் சிவா! இவர்கள் இருவருக்கும் நடுவில் சிக்கிக்கொண்டு, என்ன செய்வதென்றே தெரியாமல் அயலி தவிக்கிறார்.
அயலி, இந்திராணிக்குச் செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றுவாரா? இல்லை, சிவாவின் முடிவுக்கு வழிவிடுவாரா? கபிலனின் நிலைமை என்னவாகும்? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Source link