தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்படும் சமூக நீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ-மாணவிகளுக்கான மாதாந்திர உணவுப் படி உயர்த்தப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் மற்றும் சமையல் எரிபொருள் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, மாணவர்களுக்குத் தரமான மற்றும் சத்தான உணவு வழங்குவதை உறுதி செய்வதற்காக இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உணவுக் கட்டணம் எவ்வளவு உயர்ந்துள்ளது?
இதுவரை பள்ளிகளில் சமூக நீதி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,400 வழங்கப்பட்டு வந்த உணவுப் படி, தற்போது ரூ.1,800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1,500 உணவுப் படி, தற்போது ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இத்தகைய சமூக நீதி விடுதிகள் சுமார் 1,363-க்கும் மேற்பட்டவை செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மூன்று வேளையும் தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது.
தற்போதைய காலகட்டத்தில் பருப்பு, எண்ணெய், மளிகைப் பொருட்கள், பால், காய்கறிகள் மற்றும் இறைச்சி உள்ளிட்ட அனைத்து சமையல் பொருட்களின் விலையும், சமையல் எரிபொருள் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளன. இந்த விலை உயர்வின் சுமை மாணவர்களைப் பாதிக்காத வகையிலும், அவர்களுக்குத் தொடர்ந்து சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்த உணவுப் படி உயர்வைச் செயல்படுத்தும் விதமாக தமிழக அரசு தரப்பிலிருந்து 19 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
