வர்த்தக சங்க நிர்வாகிகளை சந்திக்க நேரம் ஒதுக்க கோரி சம்மேளனம் கடிதம்

புதுடில்லி: தலைநகர் டில்லி ராம்லீலா மைதானத்தில் நவம்பர் 1-ம் தேதி நடத்தவுள்ள, இண்டி கூட்டணி கட்சி பேரணியை ஒத்திவைப்பது தொடர்பாக பேச, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை சந்திக்க, வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனம் அனுமதி கேட்டுள்ளது.

இதுகுறித்து, வர்த்தக மற்றும் தொழில் சம்மேளன தலைவர் பிரிஜேஷ் கோயல், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு மூன்றாவது முறையாக இன்று (அக்.,28) அனுப்பியுள்ள கடிதம்:

கர்வா சாத் மற்றும் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் காலத்தில், எதிர்க்கட்சிகள் நவம்பர் 1ம் தேதி டில்லியில் பேரணி நடத்த முடிவு செய்திருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. இதனால், சிறு வியாபாரிகள் முதல் அனைத்து வர்த்தகர்களும் கடுமையாக பாதிக்கப்படுவர். பேரணி நடத்த முடிவு செய்துள்ள ராம்லீலா மைதானத்தை சுற்றி 1 –5 கி.மீ., சுற்றளவில் அமைந்துள்ள சாந்தினி சவுக், பகீரத் பேலஸ், காரி பாவோலி, சதர் பஜார், சாவ்ரி பஜார், காஷ்மீரி கேட், நபி கரீம், கரோல் பாக், அஜ்மீரி கேட், தர்யா கஞ்ச், நை சரக், கினாரி பஜார், தாரிபா கலான், பதேபுரி, நயா பஜார், பிலிமிஸ்தான், பஹர் கஞ்ச், கபார் மார்க்கெட், ஜூம்மா மசூதி அருகே -மீனா பஜார் மற்றும் லஜ்பத் ராய் மார்க்கெட் ஆகிய இடங்களில் வணிகம் கடுமையாக பாதிக்கும்.

எனவே, தீபாவளி பண்டிகை முடிந்த பின், இந்த பேரணியை நடத்த வேண்டும் என கோரி, ஏற்கனவே இரண்டு கடிதங்கள் அனுப்பியுள்ளோம். இது தொடர்பாக நேரில் சந்தித்து வணிகர்களின் நிலையை விளக்க, வர்த்தக சங்கங்களின் 20 பிரதிநிதிகளுக்கு, 20 நிமிடம் நேரம் ஒதுக்க வேண்டும். இந்தப் பேரணியில், 10 லட்சம் பேர் பங்கேற்பர் என கூறப்படும் நிலையில், வணிக நடவடிக்கைகளை எவ்வாறு பாதிக்கும் என்பதை விளக்க, வர்த்தக சங்க நிர்வாகிகள் விரும்புகின்றனர். நாங்கள் மோதலை விரும்பவில்லை. பேச்சு நடத்தவே விரும்புகிறோம். இதுவே ஜனநாயகத்தின் சிறப்பம்சமாக இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் நடத்தும் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில், உண்மையான வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு பொறுப்பேற்று, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் இண்டி கூட்டணி சார்பில், டில்லி ராம் லீலா மைதானத்தில் நவம்பர் 1ம் தேதி மாபெரும் பேரணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link