எழுதியவர்கள்: ஆசாத் ரஹ்மான், ஜார்ஜ் மேத்யூ
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை, டாடா குழுமத்தின் தற்போதைய நிர்வாக மோதலைக் கையாளும் முறையை விமர்சித்ததுடன், இக்குழுமம் “கிரிமினலாக அழிக்கப்பட்டு வருகிறது” என்று குற்றம் சாட்டினார். மேலும், தொழிலதிபர்கள் இதுகுறித்து பேசாமல் அமைதியாக இருப்பதாகவும் அவர் சாடினார்.
டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா மற்றும் குழுமத்தின் முதன்மைத் தலைமை நிறுவனமான டாடா சன்ஸ் வாரியத்திற்கு இடையே விரிசல்கள் அதிகரித்து வரும் நிலையில் இவரது கருத்துகள் வெளியாகியுள்ளன.
“டாடா நிறுவனம் கிரிமினலாக அழிக்கப்பட்டு வருகிறது, எந்தவொரு தொழிலதிபரும் ஒரு வார்த்தை கூட பேசத் துணியவில்லை. எவ்வளவு காலம் அமைதியாக இருப்பீர்கள்? அவர்கள் உங்களை ஆட்கொள்ளும் வரையா? இந்திய தொழில்துறை என்பது மோடி மற்றும் அமித்ஷாவின் விளையாட்டுப் பொருள் அல்ல. உங்களுக்கு தைரியம் இல்லை. எங்களுக்கு தைரியம் இருக்கிறது. இந்த குற்றங்களுக்கு நாங்கள் நீதி கிடைப்பதை உறுதி செய்வோம்” என்று ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கருத்து வேறுபாடு என்ன?
இந்தியாவின் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்ற அடிப்படை கேள்விகளை எழுப்பியுள்ள இந்த மோதலால், டாடா குழுமம் சமீபத்திய ஆண்டுகளில் மிகப்பெரிய நிர்வாகப் போராட்டத்தைச் சந்தித்து வருகிறது.
2026 செப்டம்பரில் டாடா சன்ஸ் வாரியம் அதன் தலைவர் என். சந்திரசேகரனுக்கு மேலும் 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கி ஒப்புதல் அளித்தபோதும், பங்குச்சந்தைப் பட்டியலை நோக்கி நகர்ந்தபோதும் மோதல் தீவிரமடைந்தது. இந்த இரண்டு முடிவுகளையும் எதிர்த்த நோயல் டாடா, இவை டாடா டிரஸ்ட்ஸின் நிலைப்பாட்டிற்கு முரணாக இருப்பதாகவும், வாரியத்தின் அதிகாரம் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறை குறித்து கேள்விகளை எழுப்புவதாகவும் வாதிட்டார்.
டாடா டிரஸ்ட்ஸின் அறங்காவலர்களான வேணு சீனிவாசன் மற்றும் விஜய் சிங் ஆகிய இருவரும் டாடா டிரஸ்ட்ஸின் நிர்வாகச் சிக்கல்கள் குறித்து தொண்டு நிறுவனங்கள் ஆணையரை அணுகியுள்ளனர். போதிய உறுப்பினர்கள் (Quorum) வருகை தராததால் டாடா சன்ஸின் வருடாந்திரப் பொதுக்கூட்டம் (ஏ.ஜி.எம்) ஒத்திவைக்கப்பட்டது.
டாடா சன்ஸ் நிறுவனத்தில் டாடா டிரஸ்ட்ஸ் கூட்டாக சுமார் 66 சதவீத பங்குகளை வைத்துள்ளன. இதன் மூலம் பெரும்பான்மை உரிமையையும், குழுமத்தின் நிர்வாகத்தில் கணிசமான செல்வாக்கையும் கொண்டுள்ளன. அக்டோபர் 2024-இல் ரத்தன் டாடா மறைந்த பிறகு நோயல் டாடா, டாடா டிரஸ்ட்ஸின் தலைவரானார். அதன்பிறகு, அறங்காவலர்கள் நியமனம், வாரிய பிரதிநிதித்துவம் மற்றும் குழுமத்தின் எதிர்கால திசை குறித்து வேறுபாடுகள் உருவெடுத்தன.
சிக்கலின் பின்னணி
டாடா சன்ஸ் ஒரு தனியார் நிறுவனமாகவே தொடர வேண்டுமா அல்லது அதன் பங்குகளை பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டுமா என்பதே முக்கிய மோதல் புள்ளியாக உள்ளது. மார்ச் 2024-இல், டாடா சன்ஸ் வாரியம் நிறுவனத்தைப் பட்டியலிடாமல் வைத்திருப்பதை ஏகமனதாக ஆதரித்தது. அதன் பிறகு இரு முக்கிய டாடா டிரஸ்ட்களும் 2025-இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் அந்த நிலைப்பாட்டை மீண்டும் உறுதி செய்தன.
செப்டம்பர் 2026-ல் டாடா சன்ஸ் தனது பதிவை ஒப்படைக்கக் கோரி அளித்த விண்ணப்பத்தை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நிராகரித்த முடிவு, இந்தப் பிரச்சினையை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது. மேல்மட்ட வங்கி சாரா நிதி நிறுவனமாக அதன் வகைப்பாடு, பங்குச்சந்தை பட்டியல் தேவை உள்ளிட்ட ஒழுங்குமுறை தாக்கங்களைக் கொண்டுள்ளது. ஆர்பிஐ-யின் அறிவிப்பு பட்டியலிடுவதை வெளிப்படையாகக் கட்டாயப்படுத்தவில்லை என்றும், நிறுவனம் மாற்று தீர்வுகளை ஆராய வேண்டும் என்றும் நோயல் டாடா வாதிட்டார்.
சந்திரசேகரன் மீண்டும் நியமிக்கப்பட்டது குறித்தும் இந்த மோதல் மையம் கொண்டுள்ளது. நோயல் டாடா தலைமையிலான டாடா டிரஸ்ட்ஸ், வாரியத்தின் முடிவின் செல்லுபடியாகும் தன்மையைக் கேள்வி எழுப்பியது. குறிப்பாக நோயல் டாடா முன்மொழிவை எதிர்த்த நிலையில், மற்றொரு டிரஸ்ட் பிரதிநிதியான வேணு சீனிவாசன் அதை ஆதரித்ததால், தலைவரின் முடிவு வாக்கைப் பயன்படுத்தி இ முடிவு எடுக்கப்பட்டது.
டாடா சன்ஸின் விதிமுறைகளின்படி டிரஸ்ட் பிரதிநிதிகளின் நேர்மறையான ஆதரவு தேவை என்று டிரஸ்ட் தரப்பில் வாதிடப்பட்டது. இருப்பினும், பெரும்பான்மை வாக்களிப்பு மூலமே தலைவர் மீண்டுமாக நியமிக்கப்பட்டதாக டாடா சன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொழில்செயல்திறனும் இந்த பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஏர் இந்தியா மற்றும் டாடா டிஜிட்டல் உள்ளிட்ட பட்டியலிடப்படாத வணிகங்களில் அதிகரித்து வரும் இழப்புகள், நிதி ஒதுக்கீடு மற்றும் அதிகாரிகளின் ஊதியம் குறித்து நோயல் டாடா கவலைகளை எழுப்பியுள்ளார். இதனிடையே, அறங்காவலர்களிடையேயான கருத்து வேறுபாடுகள் முறையான புகார்களாகவும் பகிரங்கப் பரிமாற்றங்களாகவும் வெடித்து, நிறுவனத்தின் நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்த மோதல் இப்போது வெறும் பெருநிறுவன உத்தி சார்ந்த கருத்து வேறுபாடு மட்டுமல்ல; இது பெரும்பான்மை உரிமை, வாரியத்தின் சுதந்திரம் மற்றும் தலைமுறை தலைமுறையாக டாடா குழுமத்தை வடிவமைத்த நிர்வாக அமைப்புகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியாக மாறியுள்ளது.
