சண்டிகர்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி தொடர்பான வழக்கில், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியதற்கான அறிக்கை சமர்ப்பிக்காததால், பஞ்சாப் தலைமைச் செயலர் கே.ஏ.பி. சின்ஹாவுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி வழங்க, ஆகஸ்ட் 3ம் தேதி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை செயல்படுத்தியது குறித்து, பஞ்சாப் அரசு தலைமை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தது.
ஆனால், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி பஞ்சாபில் வழங்கப்படவில்லை. இதையடுத்து, பஞ்சாப் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி ஹர்ஷ் பங்கர் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:
பஞ்சாப் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி வழங்குவது தொடர்பாக நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாத, பஞ்சாப் அரசின் தலைமை செயலர் கே.ஏ.பி.சின்ஹாவுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், ஆகஸ்ட் 3ம் தேதி பிறப்பித்த உத்தரவின் நிலை குறித்து, தலைமை செயலர் தன் தனிப்பட்ட பிரமாண பத்திரத்தைச் நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வழக்கு நவம்பர் 3ம் தேதி விசாரிக்கப்படும் போது, தலைமை செயலர் சின்ஹா ஆஜராக வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
