கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தாவின் கல்விச் சேவையைப் போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணிமண்டப வளாகத்தில் அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வு பயிற்சி மையம் மற்றும் நூலகம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சுவாமி சகஜானந்தா பணி நிறைவு பெற்றோர் சமூக அறக்கட்டளை சார்பில், மணிமண்டப வளாகத்தில் மாணவர்கள் அரசு வேலைவாய்ப்பைப் பெறும் வகையில் போட்டித் தேர்வு பயிற்சி மையம் மற்றும் நூலகம் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில், கடந்த 2018–19ஆம் ஆண்டில் அப்போதைய மாநிலங்களவை மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே. ரங்கராஜனின் நிதியிலிருந்து ரூ.24 லட்சம் செலவில் பயிற்சி மையமும், மாவட்ட ஆட்சியர் நிதியில் இருந்து ரூ.25 லட்சம் செலவில் நூலகமும் அமைக்க அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, கட்டுமானப் பணிகள் ஓராண்டுக்குள் நிறைவடைந்து, பயிற்சி மையமும் நூலகமும் பயன்பாட்டுக்குத் தயாராகின.
ஆனால், கடந்த 6 ஆண்டுகளுக்கு மேல் பயிற்சி மையத்தை இயக்குவதற்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், அவை பல ஆண்டுகளாகச் செயல்படாமல் இருந்தன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகளிடம் அறக்கட்டளை நிர்வாகிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது விஜய் தலைமையிலான அரசு பொறுபேற்ற பிறகு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் பயிற்சி மையத்தைச் செயல்படுத்த 9 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கடந்த 21ஆம் தேதி முதல் பயிற்சி மையம் செயல்படத் தொடங்கியுள்ளது. இங்கு தினமும் 2 ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பயிற்சி அளித்து வருகின்றனர்.
இதில் சிதம்பரம், சீர்காழி, குமராட்சி, காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு, அண்ணாமலைநகர், விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 150-க்கும் அதிகமான மாணவர்கள் பயிற்சி மையத்தில் சேர விண்ணப்பித்துள்ளனர். தற்போது தினமும் சுமார் 140 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். முதற்கட்டமாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மட்டுமின்றி, ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி), ரயில்வே தேர்வு வாரியம் (ஆர்ஆர்பி), பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி), வங்கித் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு அரசுப் போட்டித் தேர்வுகளுக்கும் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் பயிற்சி மையத்தில் பதிவு செய்துகொள்ளலாம். பயிற்சி மையத்துக்கு வரும் மாணவர்களுக்குத் தேவையான நோட்டுப் புத்தகங்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான குறிப்பேடுகள் உள்ளிட்ட அடிப்படைவசதிகளை சுவாமி சகஜானந்தா பணி நிறைவு பெற்றோர் சமூக அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் மணிமண்டப ஊழியர்கள் செய்து வருகின்றனர். தினமும் மாணவர்களின் எண்ணிக்கை கூடிகொண்டே செல்வதால் நூலக கட்டிடத்திலும் வகுப்புகள் நடைபெறுகிறது.
இந்த வாய்ப்பை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்தி, அரசுப் பணிகளில் உயர் பதவிகளைப் பெற வேண்டும் என அறக்கட்டளை நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
