தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகளும் போலீஸாரிடம் சிக்கினர்

ஆண்டிபட்டி: தேனி சிறையில் இருந்து தப்பிச் சென்ற 17 கைதிகளில் 15 பேர் நேற்று காலை வரை பிடிபட்ட நிலையில், மீதம் உள்ள மதுரையைச் சேர்ந்த இரண்டு கைதிகள் தற்போது பிடிபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து சிறையில் இருந்து தப்பிய அனைத்து கைதிகளையும் போலீஸார் பிடிபட்டுள்ளனர்.

தேனி மாவட்ட சிறையில் இருந்து கடந்த 26-ம் தேதி இரவு அங்கிருந்த போலீஸாரை தாக்கி 17 பேர் தப்பியோடினர். இதில் முதற்கட்டமாக பிரவீன் குமார் என்பவர் சிறைக்கு அருகே பிடிபட்டார். இதனைத் தொடர்ந்து சிலம்பரசன், ராஜாசிக்கந்தர், ராஜ்குமார், மாற்றுத் திறனாளி கைதியான பிரசாந்த் என்ற லிங்கபிரசாத் உட்பட மொத்தம் 5 பேர் நேற்று முன்தினம் பிடிபட்டனர்.

பின்பு வனப்பகுதியில் மறைந்திருந்த கருப்பசாமி, தருண்குமார், பாண்டிச்செல்வம், சபரிநாதன், நிஷாந்த், முத்து இளங்கோவன், கார்த்திக் ராஜா, சோலை முகிலேஸ்வரன் ஆகிய 8 பேர் ட்ரோன் தேடுதலில் சிக்கினர். மொத்தம் 13 பேர் சிக்கிய நிலையில், முதற்கட்டமாக பிடிபட்ட 5 கைதிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 8 பேர் க.விலக்கு காவல்நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மலைப்பகுதியில் பதுங்கி இருந்த பொன்முத்து, ரெஜின் ஆகியோரை தனிப்படை போலீஸார் இன்று காலையில் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.

மீதம் உள்ள திருப்பதி, மீனாட்சி சுந்தரம் (இருவரும் சகோதரர்கள்) ஆகியோர் தாங்கள் பதுக்கி இருந்த இடத்தை போலீஸார் நெருங்கியதை அறிந்ததும் மலையில் இருந்து வேறு பாதையில் மலையடிவாரத்துக்கு ஓடினர்.

பின்பு அந்த வழியே பைக்கில் வந்தவரை தாக்கிவிட்டு வண்டியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர். இந்த இரண்டு பேர் மட்டுமே பிடிபடாமல் இருந்ததால் போலீஸார் தரப்பில் தேடுதல் வேட்டை மேலும் மும்முரப்படுத்தப்பட்டது.

இருசக்கர வாகனத்தில் தப்பியதால் தேனி மாவட்ட எல்லையில் வாகன சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது. க.விலக்கு உள்ளிட்ட பல பகுதிகளிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இதுவரை பிடிபடாமல் இருந்த இரண்டு கைதிகளின் தாயார் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், “என் இரண்டு மகன்கள் மீது பொய் வழக்கு போடாதீர்கள். அவர்களுக்கு எந்த சேதமும் இன்றி நீதிமன்றத்தில் ஒப்படையுங்கள். என் மகன்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

எனது மூத்த மகன் மீனாட்சி சுந்தரத்தின் மனைவி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். ஆகவே எனது மகன்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது” என்று அதில் தெரிவித்துள்ளார்.

தப்பியவர்களை சுட்டுப்பிடிக்க உள்ளதாக தகவல் பரவிய நிலையில், இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த இரண்டு கைதிகளும் இன்று மாலை கூடலூர் வடக்கு காவல் நிலையத்துக்கு சரணடைய வருவதாக இருந்தது. தகவலறிந்த போலீஸார் அங்கு குழுமினர். உத்தமபாளையம் டிஎஸ்பி.சந்திரசேகரன், ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான குழுவினர் வரும் வழியிலேயே இருவரையும் கைது செய்து க.விலக்கு காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதன் மூலம் தப்பிய 17 கைதிகளும் பிடிபட்டதால் போலீஸார் தரப்பில் நிம்மதியடைந்துள்ளனர்.

Source link