பிரபல தொழிலதிபர் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி, சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குழந்தை நல ஆர்வலர் ஒருவர் புகார் கொடுத்ததன் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இவ்வழக்கில் வீரமணி, அவரது உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், வீரமணி நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் உதவியாளர் கணேசன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஏற்கனவே ஜெம் வீரமணி மீது 7 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மேலும் ஒரு சிறுமியின் புகார் மற்றும் வாக்குமூலத்தின் அடிப்படையில் 8 ஆவதாக மேலும் ஒரு வழக்கு 21.10.2026ஆம் தேதி பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கில் 3 வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சிறப்பு புலனாய்வு குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது
முன்னதாக இந்த வழக்கில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன் குமார் தெரிவித்திருந்தார். இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க ஜான் பாண்டியனுக்குச் சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் ஜெம் வீரமணி வழக்கில் ஜான் பாண்டியனிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜான் பாண்டியனிடம் பல மணி நேரம் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அப்போது பாலியல் விவகாரம் தொடர்பாகத் தனக்கு எதுவும் தெரியாது என்று ஜான் பாண்டியன் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம் சாந்திக்கும் வீரமணிக்கும் இடையே ஏற்கெனவே இருந்த பிரச்சினை தொடர்பாகவே அவர்கள் தன்னிடம் பேசியதாகவும் ஜான் பாண்டியன் காவல்துறையிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களுக்கும் சம்மன் அனுப்பி, ஒவ்வொருவரிடமும் விசாரணை மேற்கொள்ளச் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
