டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை ராஜினாமா செய்யக்கோரி டெல்லியில் நவம்பர் 1ம் தேதி ‘இந்தியா’ கூட்டணி கட்சியினர் பேரணி அறிவித்துள்ளனர். இந்த பேரணிக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முதல் முறையாக ஆதரவு தெரிவித்துள்ளது. இது மத்திய பாஜக அரசுக்கு புதிய சிக்கலாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதற்காக இதுவரை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தனியாகவும், ‘இந்தியா’ கூட்டணி கட்சியினர் தனியாகவும் போராட்டம் அறிவித்து நடத்தினர்.
தற்போது முதல் முறையாக டெல்லி போராட்டத்தில் ‘இந்தியா’ கூட்டணியின் அனைத்து கட்சிகளுடன் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி களமிறங்க உள்ளது. இதுதொடர்பாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் அபிஜித் தீப்கே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
” யார் வாக்களிக்கலாம் என்பதை அரசு நிர்ணயம் செய்வதை விட மக்கள் தங்களுக்கான அரசாங்கத்தை தேர்வு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் தான் ஜனநாயகம் உருவாக்கப்பட்டது. சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவிக்கை என்பது இந்த கொள்கையை சிதைத்துள்ளது. தகுதியான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஞானு (இந்திய தலைமை தேர்தல் ஆணையர்ஞானேஷ் குமார்) கண்டிப்பாக போகவேண்டும். ‘இந்தியா’ கூட்டணி கட்சியினர் நடத்தும் நவம்பர் 1ம் தேதி பேரணிக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஆதரவு வழங்குகிறது. தேசம் தான் எல்லாவற்றையும் விட உயர்ந்தது. ” என கூறியுள்ளார்.
