எனது ஆதரவால் தோல்வியில் இருந்து இஸ்ரேல் பிரதமர் தப்பினார்; அதிபர் டிரம்ப் தம்பட்டம்

-நமது நிருபர்-

மேற்காசிய நாடான இஸ்ரேல், 1948ல் நிறுவப்பட்டதில் இருந்து, அங்கு கூட்டணி அரசுகளே அமைந்துள்ளன. கடந்த, 2023ல் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல், அதைத் தொடர்ந்து ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்கள், மேற்காசியாவில் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

இஸ்ரேல் பார்லிமென்டுக்கு தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள, 120 இடங்களில், 61 இடங்களைப் பிடிக்கும் கட்சி அல்லது கூட்டணியே ஆட்சி அமைக்க முடியும்.1996ல் இருந்து வெவ்வேறு கால கட்டங்களில் மூன்று முறை, 19 ஆண்டுகள் பிரதமராக இருந்துள்ள பெஞ்சமின் நெதன்யாகு இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

இதுவரை இல்லாத சாதனை அளவாக, 77 சதவீத ஓட்டுகள் பதிவானது. இவற்றை எண்ணும் பணி, நேற்று இரவே துவங்கியது. இதுவரை, 50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ளன.

இஸ்ரேலில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்தல் நடக்கிறது. கட்சிகள் பெறும் ஓட்டுக்களின் அடிப்படையில், எம்.பி., இடங்கள் ஒதுக்கப்படும். அதன்படி, 61 இடங்களைப் பிடிக்கும் கட்சி அல்லது கூட்டணியே ஆட்சி அமைக்க முடியும்.

ஆளும் கூட்டணி

தற்போதைய பிரதமர் நெதன்யாகுவின் லிகுட் கட்சித் தலைமையிலான கூட்டணி, 53 இடங்களைப் பெறுகிறது. இதில் லிகுட் கட்சி, 26 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உள்ளது.

ஐக்கிய தோரா ஜூடாயிசம், ஷாஷ், ஓட்ஸ்மா யேகுடிட் கட்சிகள், தலா ஏழு இடங்களிலும், ஜியோனிஸ்ட் கட்சி, ஆறு இடங்களையும் பெறுகின்றன.

எதிர்க்கட்சிகள் கூட்டணி

முன்னாள் ராணுவத் தளபதியான காடி ஐசன்கோட்டின் யாஷார் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு, 48 இடங்கள் கிடைக்கும். இதில் யாஷார் கட்சி மட்டும் 21 இடங்களை பிடிக்கிறது. முன்னாள் பிரதமர் நப்தாலி பென்னட் தலைமையிலான பியாக்த் கட்சி, 12, ஜனநாயகக் கட்சி, எட்டு, இஸ்ரேல் பெய்டுனு, ஏழு இடங்களையும் பெறுகின்றன.

அரசுக் கட்சி கூட்டணி

பாலஸ்தீனத்தை தனி நாடாகக் கோரும் அரேபியர்கள், நாட்டின் மக்கள் தொகையில், 20 சதவீதம் உள்ளனர். இரண்டு அரபுக் கட்சிகள், கூட்டணி அமைந்துள்ளன. இந்தக் கூட்டணி, 19 இடங்களைப் பிடித்துள்ளது.

தற்போதைய நிலையில், எந்தக் கூட்டணிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அதிபர் உத்தரவிடலாம். பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு அவகாசம் கொடுக்கப்படும்.

இந்த மூன்று கூட்டணியில் உள்ள எந்தக் கட்சியும், மற்றொரு கூட்டணிக்கு ஆதரவளிக்கத் தயாராக இல்லை. அதனால், இஸ்ரேலில் மிக விரைவில் மீண்டும் தேர்தல் நடக்கும் சூழ்நிலை உருவாகும்.

இஸ்ரேலில், 2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் மட்டும், கூட்டணி அமையாததால், ஐந்து முறை தேர்தல் நடந்துள்ளது.

தேர்தலில் இருந்து தப்பியுள்ளார்!

தேர்தல் முடிவு தொடர்பாக
அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில்,
பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு நான் ஆதரவு தெரிவித்தேன். அதனால், இஸ்ரேல் தேர்தலில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. மிகப் பெரிய தோல்வியில் இருந்து நெதன்யாகு தப்பியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

Source link