தூத்துக்குடி கந்தன் காலனியில் சசிகலா என்ற பெண் தனது வீட்டில் தனியாக இருந்தபோது கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் வீட்டில் இருந்த நான்கு சவரன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து, நகைக்காக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
அவ்வாறு தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சசிகலாவின் உடன்பிறந்த சகோதரியின் மகனான விக்னேஷ் முனீஸ்வரன் (29) என்பவரைப் போலீசார் கைது செய்தனர். இவர் வீடுகளில் தரை ஓடுகள் பதிக்கும் வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. கொலைச் சம்பவத்தில் இவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.
அப்போது, இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய நபரை போலீசார் விரைவாகக் கைது செய்துள்ளதாகவும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் வீட்டில் நகைகள் காணாமல் போயிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், கைது செய்யப்பட்ட நபர் உயிரிழந்த பெண்ணின் நெருங்கிய உறவினர் என்றும், நகைக்காக இந்தக் கொலை நடந்ததா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார். மேலும், இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தெரிவித்தார்.
