கார்த்திகாவுக்கு வாய்ப்பு மறுப்பா? கவிதாவை வசை பாடுவது சரியா? மாறுபட்ட குரலில் எழுத்தாளர்கள்

முதலாவது காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னையின் கண்ணகி நகர் கார்த்திகா இடம் பெற்றுள்ளார். இந்நிலையில், இத்தொடருக்கான லீக் ஆட்டத்தின் போது, கார்த்திகா மைதானத்திலே கண்கலங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆட்டத்தின் போது, இந்திய பெண்கள் கபடி அணியின் பயிற்சியாளரான தமிழகத்தைச் சேர்ந்த கவிதா செல்வராஜ் உடன் ஏற்பட்ட வருத்தம் காரணமாக, கார்த்திகா களத்தில் கண் கலங்குவது போன்ற வீடியோ வெளியாகியது.  

இது தமிழக கபடி ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் பயிற்சியாளர் கவிதா-வுக்கு எதிராக குரல்கள் வலுத்தது. அவர் சமீபத்தில் அளித்த பேட்டிக்கும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு பயிற்சியாளர் கவிதாவை வசை பாடுவது சரியா? என்பது போன்ற கேள்வியை எழுத்தாளர்கள் எழுப்பி இருக்கிறார்கள். 

எச்சரிக்கை 

இதுபற்றி எழுத்தாளர் ம.தொல்காப்பியன் தனது பதிவில், “தமிழக கபடி வீராங்கனை கார்த்திகா ஓரங்கட்டப்படுவதாக பல நண்பர்களின் பதிவுகளைப் பார்க்கிறேன். எழுத்தாளர் கரன் கார்க்கி, கவிதா பாரதி போன்ற ஆளுமைகள் கூட இந்திய அணியின் பயிற்சியாளர் கவிதாவை மோசமாக வசைபாடி எழுதுவதைப் பார்க்க முடிகிறது. 

இந்தியாவுக்கும் நைஜீரியாவுக்கும் இடையில் நடந்த அந்த பெண்கள் கபடி சாம்பியன்ஷிப் ஆட்டத்தைப் நான் பார்த்தேன். அதில் இந்தியா நைஜீரியாவை 38 க்கு 10 என்கிற வலுவான புள்ளிகளுடன் வெற்றிபெற்று இருக்கிறது. அணியில் தடுமாற்றம் எதுவும் இல்லை. ரைடிங்கிலும் சரி டிஃபன்சிலும் சரி இந்திய அணி கட்டுக்கோப்பாக செயல்பட்டதை  நான் அவதானித்தேன். பயிற்சியாளர் கவிதா தனது அணிக்கு கச்சிதமான வீராங்கனைகளைத் தேர்ந்தெடுத்தும் அவர்களுக்கு சரியான வாய்ப்புகளைக் கொடுத்தும் வெற்றியை ஈட்டித் தந்திருக்கிறார். என்பது நிரூபணமாகி இருக்கிறது.

ஆனால் கார்த்திகா விளையாடாதது அல்லது  அவருக்கு குறைந்த வாய்ப்புகளே கொடுக்கப்பட்டது குறித்து தமிழகத் தரப்பில் இருந்து காரசாரமான விவாதங்கள் முன் வைக்கபப்டுகின்றன. இவர்களுடைய வாதங்களும் கோபங்களும் எந்த வகையில் சரியானவை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு தனி வீரருடைய வாய்ப்பைவிட அணியின் வாய்ப்பே முக்கியமானது. ஒரு தனி வீரருடைய நலனைவிட அணியின் நலனே முக்கியமானதும் கவனத்துக்கு உரியதும் ஆகும். அணி சரியாக செயல்பட்டதா இல்லையா என்பதைத்தான் பார்க்க வேண்டும். எவர் உள்ளே இருந்தார் எவர் வெளியே இருந்தார் என்பது பிரச்சினையே இல்லை.

அணியில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு வீராங்கனையும் முக்கியமனவர்தன். ஒருவருக்கு குறைவாகவும் ஒருவருக்கு அதிகமான வாய்ப்பும் கிடைப்பது அந்த சூழலின் நிகழ்தகவைப் பொருத்தது. ஒரு பயிற்சியாளர் ஒருவரை பயன்படுத்துவதும் ஒருவரை பயன்படுத்தாததும் அந்த சூழலின் நிகழ்தகவுதான் முடிவு செய்கிறது. ஒருச் சார்பு சிந்தனை உடைய ஒருவரை விளையாட்டு நிர்வாகம் பயிற்சியாளராக வைத்திருக்காது. அத்தகைய பயிர்சியாளரால் தனது அணியை திட்டமிட்டு செம்மையாக வழி நடத்தவும் வெற்றிபெற வைக்கவும் முடியாது. 

கவிதா செல்வராஜ் என்கிற இந்திய பெண்கள் கபடி அணி பயிர்சியாளரை இப்படி கடுமையாக விமர்சிப்பது அவரை குழப்பத்தில் ஆழ்த்தி தவறான முடிவெடுக்க அவரை தூண்டிவிடும் என்று நான் நண்பர்களை எச்சரிக்கிறேன். கார்த்திகா மட்டும் அல்ல  நமது அணியில் விளையாடும் அனைத்து வீராங்கனைகளுமே நமக்குக் கார்த்திகாக்கள்தான் என்பதை நாம் உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும்.” என்று அவர் கூறியுள்ளார். 

‘பொறாமையில் வெந்து கொதிக்கிறார்’

முன்னதாக, எழுத்தாளர் கவிதா பாரதி தனது சமூக வலைதள பதிவில், “தங்கமகள் கார்த்திகா மீது பொறாமையில், வெந்து கொதிக்கிறார் இந்தியப் பெண்கள் அணிப்பயிற்சியாளர் கவிதா செல்வராஜ். அவருக்குப்பின்னால் தினமலர் தொடங்கி தேசிய அளவில் பெரும்கூட்டமிருக்கிறது மன உளைச்சலுக்குள்ளாக்கி கார்த்திகாவை இந்திய அணியைவிட்டு வெளியேற்ற பெரும் முயற்சி நடக்கிறது. எந்த ஆதரவுமில்லாமல் தன் திறமையை மட்டுமே நம்பிக்களமிறங்கும் கார்த்திகாவைக் காப்பாற்றி களத்தில் நீடிக்கவிடுவது நம் கடமை.” என்று கூறியிருந்தார். 

‘நியாயமான வழியை விடுங்கள்’

இதேபோல், எழுத்தாளர் கரன் கார்க்கி தனது சமூக வலைதள பதிவில், “இந்த பேட்டியில் இந்த பயிற்சியாளர் சொல்வதில் இருந்தே தெரிகிறது கார்த்திகா என்கிற விளையாட்டு வீரர் மீது இந்த பயிற்சியாளருக்கு இருக்கும் ஒவ்வாமை. யாருக்கும் நீங்கள் தனி சலுகை காட்ட தேவையில்லை திறமைசாலிக்கு சரியான வாய்ப்பை வழங வேண்டும் என்பது மட்டும் தான் எங்கள் கோரிக்கை. ஒரு பயிற்சியாளர் ஒரு மிகச் சிறந்த திறமைசாலியை மேலும் திறமைசாலியாக்குவது தான் அவரை முடக்குவது அல்ல. இந்த பயிற்சியாளர் ஒரு பயிற்சியாளருகான முதிர்ச்சியோடவே பேசவில்லை. இவர் கார்த்திகாவுக்கு எதிராக செயல்படுவதற்காகவே களம் இறக்கப்பட்ட ஒருவர் போல தெரிகிறது. 

அடிதட்டு மக்களின் திறமைசாலிகளை ஒழித்துக் கட்டுவதற்கு என்று ஒரு பெரும் வலை பின்னல் இந்தியா முழுக்கவே ஆண்டாண்டு காலமாக இருக்கிறது அதன் தொடர்ச்சி தான் இது என்று நம்மால் உறுதியாக சொல்ல முடியும். கார்த்திகாவுக்கு இந்த பயிற்சியாளரை விடவும் சிறப்பமான அறிவும், கணிக்கும் ஆற்றலும் உள்ளவர் அவர் எதற்கு இந்த பயிற்சியாளர் ஆறுதலாக அணைக்க சென்ற போது அவரை கண்ணீரோடு தவிர்க்க வேண்டும். 

ஏனெனில் இவர் அவருக்கு எதிராக செயல்படுகிறவராக இருக்கிறார் என்பதுதான் அப்பட்டமான உண்மை. இது போன்ற காழ்புணர்ச்சி உள்ள பயிற்சியாளர்கள் விசாரணையின் முன் நிறுத்தப்பட வேண்டும் கார்த்திகா போன்ற வீராங்கனைகளுக்கு நியாயமான சூழல் உருவாக வேண்டும் என்பதை நம் விருப்பமும் வேண்டுகோள். கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு  தனி சலுகை எதுவும் வேண்டாம்  ஆனால் அவர் திறமைக்கான நியாயமான வழியை விடுங்கள் மறித்து கொண்டு நிற்காதீர்.” என்று கூறியிருந்தார். 

Source link