மாற்றுத்திறனாளிகளுக்கு எக்ஸ்பிரஸ் டீலக்ஸ் பேருந்துகளில் 100% இலவச பயணம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு – free bus travel for disabled in express and deluxe buses tn govt issues new government order

தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மாநில அரசு மிகப் பெரிய அறிவிப்பு ஒன்றைக் கட்டணச் சலுகையாக வெளியிட்டுள்ளது. இனி குளிர்சாதனப் பேருந்துகள் (AC Buses) தவிர்த்து, அரசுப் போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் மற்றும் டீலக்ஸ் உள்ளிட்ட அனைத்துப் பேருந்துகளிலும் மாற்றுத்திறனாளிகள் முற்றிலும் இலவசமாகப் பயணம் செய்யலாம் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நலத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:

அனைத்து அரசுப் பேருந்துகளிலும் இலவச பயணம்!

ஏற்கனவேசாதாரண கட்டணநகரப் பேருந்துகளில் (White Board) மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 100% இலவசப் பயணச் சலுகையானது, தற்போது விரிவுபடுத்தப்பட்டு அனைத்துப் பேருந்துகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இனி வரும் நாட்களில்: மாநகர / நகர பேருந்துகள் விரைவு பேருந்துகள் (Express) LSS மற்றும் டீலக்ஸ் (Deluxe) பேருந்துகள் புறநகர் பேருந்துகள் (Mofussil) மலைப்பகுதி சாதாரண கட்டண பேருந்துகள் (குளிர்சாதனப் பேருந்துகள் நீங்கலாக)ஆகிய அனைத்துப் பேருந்துகளிலும் மாற்றுத்திறனாளிகள் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம். 2016-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள 21 வகையான மாற்றுத்திறன்களில், 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிப்பு கொண்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த புதிய சலுகை பொருந்தும்.

துணையாளருக்கும் 100% இலவசம்!

தனியாகப் பயணம் செய்ய இயலாத மாற்றுத்திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுடன் வரும் துணையாளர் ஒருவருக்கும் 100% கட்டணமில்லா பயணச் சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் முழுமையான மலைப்பாதைகள் மற்றும் பகுதி மலைப்பாதைகளிலும் இந்த சலுகையைப் பயன்படுத்திப் பயனடையலாம்.

முக்கிய நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள்:

இலவசப் பயணச்சலுகையைப் பெற அரசு சில முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது:
UDID அட்டை கட்டாயம்: பேருந்தில் பயணிக்கும் போது மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையை (UDID Card) நடத்துனரிடம் கண்டிப்பாகக் காண்பிக்க வேண்டும். இந்த அட்டை இல்லாத பட்சத்தில் இலவசப் பயணம் அனுமதிக்கப்படாது. 16 இலக்க எண்: தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட 16 இலக்க எண்களைக் கொண்ட (மாதிரி: TNxxxxxxxxxxxxxx) UDID அட்டை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். பயணச் சீட்டு முறை: இலவசப் பயணம் என்றாலும், நடத்துனர் வழங்கும் பயணச் சீட்டைப் பயணிகள் பெற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலமே மாற்றுத்திறனாளிகள் மேற்கொள்ளும் பயணங்களின் எண்ணிக்கை துல்லியமாகக் கணக்கிடப்படும். 75% சலுகை தொடரும்: மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள 75 விழுக்காடு கட்டணச் சலுகையும் இதனுடன் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்.

கூடுதல் நிதி ஒதுக்கீடு:

மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த விடியல் பயணத் திட்டத்திற்கு ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக நிதி சேர்க்கப்பட்டு மொத்தம் நிதி ஒதுக்கீடு ரூ.114 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய விரிவாக்கப் பணிகளுக்காக மட்டும் அரசு கூடுதலாக ரூ.7 கோடியே 90 லட்சம் நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளது.

இந்தத் திட்டம் ஒரு “புது துணைப்பணி” (New Instrument of Service) வகைப்பாட்டின் கீழ் வருவதால், இதற்கான இறுதி ஒப்புதல் பின்னர் நடைபெறும் சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரில் முறைப்படிப் பெறப்படும். அதுவரை திட்டப் பணிகள் தொய்வின்றி நடக்க, எதிர்பாரா செலவின நிதியிலிருந்து முன்பணமாகப் பெற்றுச் செலவிடவும், நிதித்துறையின் உரிய இசைவோடும் இந்த அதிரடி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சொந்த ஊருக்கு போக Special Buses! TN அரசு எடுத்த Action

அரசாணை வெளியிடப்பட்ட தேதியிலிருந்து இந்த புதிய விரிவுபடுத்தப்பட்ட கட்டணச் சலுகை உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகை காலத்தில் அரசு எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

Source link