உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், பீகார் மற்றும் கர்நாடகத்தில் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 28 இடங்களுக்கான சட்ட மேலவைத் தேர்தல் அக்டோபர் 23-ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று (28-10-26) அறிவிக்கப்பட்டன. வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், இந்தத் தேர்தல் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 12 இடங்களில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியாமல் பின்னடைவைச் சந்தித்தது. குறிப்பாக காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கர்நாடகாவில் அக்கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் தோல்வி அடைந்துள்ளது. கர்நாடகாவில் 4 தொகுதிகளில் நடைபெற்ற இத்தேர்தலில் பா.ஜ.க 3 இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. உத்தரபிரதேசத்தில் 11 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் நேற்று நிலவரப்படி பா.ஜ.க 5 இடங்களிலும், சமாஜ்வாதி 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.
பீகாரில் 8 இடங்களுக்க் நடைபெற்ற தேர்தலில், பா.ஜ.க 1 இடத்திலும், ஐக்கிய ஜனதா தளம் 1 இடத்திலும், ராஷ்டிரிய ஜனதா தளம் 1 இடத்திலும், ஜன் சுராஜ் 1 இடத்திலும், சுயேட்சை 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. மகாராஷ்டிராவில் 5 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க 2 இடங்களையும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 1 இடத்திலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 2 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமாக, தேர்தல் நடைபெற்ற 28 எம்.எல்.சி இடங்களில் பாஜகவின் 13 இடங்கள் உட்பட மொத்தம் 16 இடங்களை என்.டி.ஏ கூட்டணி வென்றது. காங்கிரஸ் 1 இடத்தில் கூட வெற்றி பெறவில்லை எனக் கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள முக்கியமான உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, பிரதமர் மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில், ஆசிரியர் மற்றும் பட்டதாரி தொகுதிகளுக்கான தேர்தலில் பாஜக, சமாஜ்வாதி கட்சியிடம் தோல்வியடைந்தது. மேலும், பீகாரின் பாட்னா ஆசிரியர் தொகுதியிலும் பாஜக தோல்வியைச் சந்தித்தது. இந்தத் தொகுதியை அக்கட்சி கடந்த மூன்று தசாப்தங்களாகத் தன் வசம் வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்த தேர்தல் முடிவை வைத்து காங்கிரஸை பிரதமர் நரேந்திர மோடி கிண்டலடித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், பீகார் மற்றும் கர்நாடகம் ஆகிய 4 பெரிய மாநிலங்களில் உள்ள 28 இடங்களுக்கு எம்எல்சி (MLC) தேர்தல்கள் நடைபெற்றன. வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்தத் தேர்தல்களில்,காங்கிரஸ் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?…” எனத் தெரிவித்துள்ளார்.
