அந்த வகையில், தமிழ்நாடு அரசு, பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த, தமிழக அரசு சன்னரக அரிசி, துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கூட்டுறவு மற்றும் அமுதம் அங்காடிகள் மூலம் சந்தை விலையை விடக் குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் தான் தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி கார்டுதாரர்களுக்கு தலா 2 கிலோ கோதுமை மாவை பாக்கெட்டுகளில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இதில், அரிசி கார்டுதாரர்கள், தங்களுக்கான அரிசி ஒதுக்கீட்டில், குறிப்பிட்ட அளவு அரிசிக்கு பதில், கோதுமை வாங்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
