டெல்லியில் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்.ஐ.ஆர்) எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், வாக்காளர் பட்டியலிலிருந்து வாக்காளர்களை நீக்குவதற்கு தரவு பிழைகளை (Logical Discrepancy) ஒரு காரணமாகப் பயன்படுத்துவதன் அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மை குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், பீகார் சிறப்பு தீவிர திருத்தத்தின் சட்டபூர்வ தன்மையை உறுதிசெய்தபோது இது நீதிமன்றத்தின் முன் ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை என்றும் புதன்கிழமை தெரிவித்தது.
தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜோய்மால்யா பாக்சி மற்றும் நீதிபதி வி. மோகனா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, டெல்லியில் வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்ட, கணிப்பு படிவங்களை (Enumeration Forms) நிரப்ப முடியாத வாக்காளர்களுக்கு, அப்படிவங்களைச் சமர்ப்பிக்க அனுமதிப்பது குறித்துப் பரிசீலிக்குமாறு இந்தியத் தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொண்டது. இந்த கணிப்பு படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 17 ஆகும்.
அலுவலகச் பணி அல்லது சொந்த வேலை காரணமாகத் தற்காலிகமாக டெல்லிக்கு வெளியே சென்றவர்கள் தொடர்ந்து கணிப்பு படிவத்தைச் சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், டெல்லிக்குள்ளேயே வேறு முகவரிக்கு மாறியிருந்தால் படிவம் 8-ஐச் சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்ற அமர்வு கூறியது.
நீதிமன்றத்தின் இந்த ஆலோசனையைப் பரிசீலிப்பதாகக் கூறிய இந்தியத் தேர்தல் ஆணையம், உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளுக்கான படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான அக்டோபர் 30 ஆம் தேதி காலக்கெடுவை நீட்டிப்பதாக வாய்மொழியாக உறுதியளித்தது.
‘தர்க்கரீதியான முரண்பாடு’ அறிமுகப்படுத்தப்பட்ட விதம்
ஜூன் 24, 2025 அன்று பீகாரில் தொடங்கப்பட்ட சிறப்பு தீவிர திருத்த உத்தரவுகளிலோ அல்லது அக்டோபர் 27, 2025 மற்றும் மே 14, 2026 ஆகிய தேதிகளில் பிற மாநிலங்களுக்கு விரிவாக்கப்பட்ட உத்தரவுகளிலோ தரவு பிழை என்ற வார்த்தையைத் தேர்தல் ஆணையம் குறிப்பிடவில்லை. ஆனால், இந்தத் திருத்தப் பணி நடைபெற்றபோது, வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர்கள் சமர்ப்பித்த ஆவணங்களின் அடிப்படையில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டத் தேர்தல் ஆணையம் ஒரு மத்திய மென்பொருளைப் பயன்படுத்தியது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
மேற்கு வங்கம் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் நடைபெற்ற இரண்டாம் கட்ட சிறப்பு தீவிர திருத்தத்தில், ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட உடன்பிறந்தவர்கள் இருப்பது, ஆவணங்களில் சொந்தப் பெயர் அல்லது பெற்றோர் பெயரில் எழுத்துப் பிழை இருப்பது, வாக்காளருக்கும் பெற்றோர் ஒருவருக்கும் இடையே 15 ஆண்டுகளுக்கும் குறைவான அல்லது 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயது இடைவெளி இருப்பது என ஆறு பிரிவுகள் உள்ளதாக முதன்மைத் தேர்தல் அதிகாரி அலுவலகப் பதிவுகள் காட்டியது. இந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட மூன்றாம் கட்டத்தில், இந்தப் பிரிவுகள் 11 ஆக விரிவாக்கப்பட்டன.
சமூக ஆர்வலர்கள் அஞ்சலி பரத்வாஜ் மற்றும் அம்ரிதா ஜோஹ்ரி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது, தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.எஸ். நாயுடு பீகார் சிறப்பு தீவிர திருத்தைக் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி பாக்சி, பீகார் திருத்தத்தில் தேர்தல் ஆணையத்திற்கு சில எஞ்சிய அதிகாரங்கள் உள்ளன என்றும், குறிப்பாகச் சிறப்பு தீவிர திருத்தத்தைத் தொடங்குவதில் அந்த அதிகாரங்கள் உள்ளன என்றும் தாங்கள் கூறியதாகத் தெரிவித்தார். படிவம் 6, 7, 8 ஆகியவற்றை மாற்ற முடியாது என்றும், ஆனால் அந்தப் படிவங்களுடன் கூடுதல் தகவல்களைச் சேர்க்கலாம் என்றும் அவர் கூறினார்.
டெல்லி சூழலில், ஆணையம் ஒரு படிவத்தைக் கேட்பதற்குப் பதிலாக, அந்த நபர் ஏன் கணிப்பு படிவத்திற்குப் பதிலளிக்கவில்லை என்பதற்கான ஒரு உறுதிமொழி அறிக்கையைக் கேட்டிருக்கலாம் என்று அவர் கூறினார். பீகார் தீர்ப்பு ஒரு கட்டுப்படுத்தும் முன்னுதாரணமாக இருக்க முடியாது, ஏனெனில் பீகாரில் தேர்தல் ஆணையம் தர்க்கரீதியான முரண்பாட்டை ஒரு பிரிவாக எடுத்துக்கொள்ளவில்லை என்று நீதிபதி பாக்சி கூறினார். மேற்கு வங்கத்தில் ஒரு இடைக்கால ஏற்பாடாக மட்டுமே தாங்கள் அனுமதித்ததாகவும், தர்க்கரீதியான முரண்பாட்டின் சட்டபூர்வ தன்மை குறித்து தாங்கள் இன்னும் இறுதித் தீர்ப்பு வழங்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
உணர்ச்சிப்பூர்வமான விஷயங்களில் நீதிமன்ற நடவடிக்கைகளின் கருத்துகள் சூழலுக்குப் புறம்பாக வெளியாவதால் தேவையற்ற சர்ச்சைகள் உருவாவதாகக் கூறிய அவர், தாங்கள் தெரிவிக்கும் இந்தக் கருத்துகள் இறுதியானவை அல்ல என்றும் குறிப்பிட்டார்.
பழைய வாக்காளர் பட்டியல்களைத் திறப்பது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி
2003 ஆம் ஆண்டு சிறப்பு தீவிர திருத்தத்திற்குப் பிறகு தயாரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள ஒரு பதிவை, தர்க்கரீதியான முரண்பாட்டைக் சுட்டிக்காட்டி எவ்வாறு மீண்டும் திறக்க முடியும் என்று நீதிபதி பாக்சி கேள்வி எழுப்பினார். 2003 ஆம் ஆண்டின் சிறப்பு தீவிர திருத்தத்தில் அனைத்தும் பரிசீலிக்கப்பட்ட நிலையில், 2003 முதல் 2026 வரை சுருக்கமான திருத்தங்கள் மட்டுமே நடந்துள்ளன என்றும், அப்படியிருக்க 2003 பட்டியலில் உள்ள ஒரு நபரின் பதிவை தர்க்கரீதியான முரண்பாட்டைக் காரணம் காட்டி இந்தச் சிறப்பு தீவிர திருத்தம் எவ்வாறு மீண்டும் திறக்க முடியும் என்றும் அவர் வினவினார்.
பீகார் தீர்ப்பில் பரிசீலிக்கப்படாத ஒரு கேள்வியைத்தான் தாங்கள் இப்போது எழுப்புவதாகவும், ஆனால் அனைவரும் பீகார் தீர்ப்பைக் காட்டி அனைத்தும் முடிவு செய்யப்பட்டுவிட்டதாக வாதிடுவதாகவும் நீதிபதி கூறினார். அதற்கு வழக்கறிஞர் நாயுடு, பீகாருக்குப் பிறகு சிறப்பு தீவிர திருத்தம் முன்னேறியபோது, ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு சவால்களைச் சந்தித்ததாகவும், அதை எதிர்கொள்ளத் தேர்தல் ஆணையம் புதிய வழிகளைக் கண்டறிந்ததாகவும் விளக்கமளித்தார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பைச் சுட்டிக்காட்டினார். தேசியத் தலைநகர் டெல்லியில் சிறப்பு தீவிர திருத்தத்தின் தொடக்கத்தில் 1,45,10,299 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர் என்றும், ஜூன் 30, 2026 முதல் ஆகஸ்ட் 17, 2026 வரையிலான காலத்தில் 100 சதவீதம் கணிப்பு படிவங்கள் விநியோகிக்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 17, 2026 நிலவரப்படி மொத்தம் 97,53,577 வாக்காளர்கள் தங்கள் கணிப்பு படிவங்களைச் சமர்ப்பித்துள்ளனர் என்றும், 47,56,722 வாக்காளர்கள் அங்கு இல்லை, முகவரி மாறிவிட்டனர், இறந்துவிட்டனர் அல்லது இரட்டைப் பதிவாக உள்ளனர் என்பதால் படிவங்களைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள 97,53,577 வாக்காளர்களில், கணினியால் கண்டறியப்பட்ட தர்க்கரீதியான முரண்பாட்டின் அடிப்படையில் 19,34,243 வாக்காளர்களுக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறிய பிரசாந்த் பூஷன், ஆனால் தர்க்கரீதியான முரண்பாடு என்றால் என்ன என்பதைத் தேர்தல் ஆணையம் எந்தவொரு ஆவணத்திலும் வரைவிலக்கணம் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார். இதற்குப் பதிலளித்த நாயுடு, இது ஏற்கனவே மேற்கு வங்கத்தில் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் அனுமதிக்கப்பட்டது இறுதி முடிவல்ல
தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞரிடம் நீதிபதி பாக்சி கூறுகையில், ஆணையம் சில மாதிரிகளை உருவாக்கியுள்ளதாகவும், அந்த மாதிரிகளை உருவாக்குவதில் மனிதக் காரணியின் மனப் பயன்பாடு உள்ளதா என்பதைத் தாங்கள் பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறினார். அங்கு மனிதக் காரணியின் மனப் பயன்பாடு எதுவும் இருக்கவில்லை என்றும், இது குறித்து இப்போது தாங்கள் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றாலும் இந்த விவகாரத்தைப் பரிசீலிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார். பீகார் திருத்தத்தில் தர்க்கரீதியான முரண்பாடு பரிசீலிக்கப்படவில்லை என்றும், அது முதன்முறையாக மேற்கு வங்கத்தில்தான் செய்யப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஏற்கனவே பரிசீலிக்கப்பட்ட சில விஷயங்கள் இருந்ததால் தாங்கள் அதற்கு அனுமதி அளித்ததாகவும், ஆனால் அதற்கு தாங்கள் இறுதி முடிவெடுத்துவிட்டதாகப் பொருளில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
டெல்லி சிறப்பு தீவிர திருத்தம் குறித்துத் தலைமை நீதிபதி கூறுகையில், டெல்லி போன்ற பெரிய நகரங்களில் வாழ்வாதாரத்திற்காக வேலை செய்யும் இடங்களை மாற்றி அமைத்துக் கொண்டே இருக்கும் மிதக்கும் மக்கள் தொகை உள்ளது என்று சுட்டிக்காட்டினார். அவர்களை அதிகாரிகளை அணுக வைப்பதற்குப் பதிலாக, அதிகாரிகளே அவர்களை அணுக வேண்டும் என்று அவர் கூறினார்.
வாக்காளர்களுக்குக் கணிப்பு படிவம் வழங்கப்பட்டுவிட்டதாகக் கூறும்போது, கடந்த முறை குறிப்பிடப்பட்ட முகவரியில்தான் அவர்கள் இன்னும் வசிக்கிறார்கள் என்று ஆணையம் ஊகம் செய்வதாகக் கூறிய தலைமை நீதிபதி, ஆனால் நடைமுறையில் அவர்கள் அங்கிருப்பதில்லை என்றார். ஒருவர் முகவரி மாறினால், பட்டியலைப் புதுப்பிக்கும் வகையில் அது குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டியது அவர்களின் கடமை என்றும், அப்படித் தெரிவிக்காத பட்சத்தில் பழைய முகவரியே பதிவேடுகளில் இருக்கும் என்றும் நாயுடு கூறினார்.
தேர்தல் நேரத்தில் மக்கள் சுறுசுறுப்பாகி தங்கள் வாக்கு எங்குள்ளது என்பதைக் கண்டறிய முயல்வார்கள் என்று கூறிய தலைமை நீதிபதி, ஆனால் இப்போது தேர்தல் இல்லாத நேரத்தில் மக்கள் தங்கள் பணிகளில் பிஸியாக இருக்கும்போது, தாங்கள் முகவரி மாறியதை அதிகாரிகளுக்குத் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்றார்.
டெல்லியில் முதல்முறை வாக்காளராகப் பதிவு செய்ய விரும்புபவர்கள் மட்டுமே படிவம் 6-ஐ நிரப்ப வேண்டும் என்பதையும், 2026 பட்டியலில் இருந்து இப்போது நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ முகவரி மாறியவர்கள் அல்லது டெல்லிக்கு வெளியே இருந்ததால் படிவத்தை நிரப்ப முடியாதவர்கள் படிவம் 6-ஐ நிரப்பத் தேவையில்லை என்பதையும் எளிய மொழியிலும் ஆங்கிலத்திலும் ஒரு அறிவிப்பு அல்லது சுற்றறிக்கை மூலம் தெளிவுபடுத்த முடியும் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.
முன்பு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஒரு வாக்காளரை மீண்டும் அழைப்பது ஒரு தவறு என்று நீதிபதி பாக்சி கூறினார். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று அறிவித்து படிவம் 6-ஐ நிரப்புமாறு ஒருவரைக் கேட்பது தவறானது என்று கூறிய அவர், பிறந்த தேதி, தந்தை விவரம், தொடர்பு போன்ற கூடுதல் தகவல்களைக் கேட்பதைச் சுட்டிக்காட்டினார். 2003 ஆம் ஆண்டின் பட்டியலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டால் இந்த விசாரணை புரிந்துகொள்ளத்தக்கது, ஏனெனில் 2003 க்குப் பிந்தைய அனைத்துப் பட்டியல்களையும் அழித்துவிட்டதால் அனைவரும் புதிய வாக்காளர்களாகி விடுவார்கள். அப்போது படிவம் 6 அல்லது எதுவாக இருந்தாலும் 2003 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படவில்லை என்று கூற வேண்டும். ஆனால் 2026 ஆம் ஆண்டை தகுதியான ஆண்டாக எடுத்துக்கொண்டு ஒருவர் முகவரி மாறியிருந்தால், அவருக்கு படிவம் 8 சமர்ப்பிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்த வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்த நீதிபதி அமர்வு, அக்டோபர் 30 காலக்கெடுவை நீட்டிக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும், தேர்தல் ஆணையமே தானாக முன்வந்து செயல்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறியது.
அதிகாரிகளுடன் கலந்து பேசி, படிவம் 6 மற்றும் படிவம் 8 ஆகிய இரண்டையும் தொடர்ந்து பெறுவதை உறுதி செய்யுமாறு தலைமை நீதிபதி அறிவுறுத்தினார். இப்போது எந்தக் காலக்கெடுவையும் பின்பற்ற வேண்டாம் என்றும், டெல்லியில் இப்போது எதுவும் நடக்கவில்லை என்பதால் தொடர்ந்து படிவங்களைப் பெறுமாறு கூறினார். இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை என்றும், குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் இல்லை என்றும், மக்கள் எப்போது வேண்டுமானாலும் படிவம் 6 அல்லது படிவம் 8-ஐச் சமர்ப்பிக்கலாம் என்றும் செய்தித்தாள்கள் மற்றும் இணையதளம் வழியாகப் பொது அறிவிப்பு வெளியிடுமாறு அவர் கூறினார். படிவம் 6 இல் இணைக்கப்படும் ஆவணங்களையும், படிவம் 8 இல் உள்ள ஆவணங்களையும் அதிகாரிகள் சரிபார்க்கலாம் என்றும் தலைமை நீதிபதி கூறினார்.
இதற்குப் பதிலளித்த நாயுடு, இரண்டு வாரங்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் தெரிவிப்பதாகவும், அதற்குள் காலக்கெடுவும் நீட்டிக்கப்படும் என்றும், அதைத் தாங்கள் உறுதிசெய்வதாகவும் தெரிவித்தார்.
