பூ, பிச்சைக்காரன், நூறு சாமி போன்ற படங்களை கொடுத்து ரசிகர்களின் கவனத்தை பெற்ற இயக்குநர் சசி 2019ஆம் ஆண்டில் ஹரிஷ் கல்யாணை வைத்து ஆரம்பித்த படம் ‘நூறு கோடி வானவில்’. இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்திருக்க மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
இப்படத்தை மகாதேவ் மீடியா மற்றும் அருண் அருணாச்சலம் புரொடக்ஷன் தயாரித்திருக்க சித்து குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீஸூக்கு தயாரானது. ஆனால் சில காரணங்களால் வெளியாகவே இல்லை. அதன் பிறகு எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. திரையரங்கில் இல்லாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜீ 5 ஓடிடி தளத்தில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி வெளியாகிறது. இயக்குநர் சசி இயக்கத்தில் கடைசியாக வெளியான நூறு சாமி படம் நல்ல வரவேற்பை பெற்றதால் அதுவே இப்படம் வெளியாக காரணம் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது. நூறு சாமி படத்தின் ஓடிடி உரிமையை ஜீ5 தான் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
