”மீண்டும் உயரும் எம்.எல்.ஏ, அமைச்சர்களின் சம்பளம்”; எவ்வளவு என்று தெரியுமா?

அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ (சட்டமன்ற உறுப்பினர்) க்களின் சம்பளம் மற்றும் படிகளை உயர்த்துவதற்கான மசோதாவுக்கு, அமைச்சரவை நேற்று (28-10-26) ஒப்புதல் வழங்கியுள்ளது.

பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த முன்மொழிவு பரிசீலனையில் இருப்பதாக  அமைச்சர் சன்னி ஜோசப் கூறி இருந்தார். இதனைத்தொடர்ந்து, முதல்வர் வி.டி. சதீசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.  

கேரளத்தில் தற்போது, எம்.எல்.ஏக்களுக்கு ரூ.70 ஆயிரமும், அமைச்சர்களுக்கு ரூ.1.08 லட்சமும் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வரையிலான ரயில் பயணக் கூப்பன் மற்றும் எரிபொருள் சலுகைகள், புத்தகங்கள் வாங்க ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரம் என வழங்கப்பட்டு வருகிறது. 

இது தவிர, மருத்துவச் செலவுகள், வாகனம் வாங்க ரூ.10 லட்சம் வரை வட்டியில்லாக் கடன், வீடு கட்ட அல்லது வாங்க ரூ.20 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன், தகுதிக்கேற்ப ஓய்வூதியம் ஆகியவையும் வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், எம்.எல்.ஏக்களின் சம்பளம் ரூ.70 ஆயிரத்திலிருந்து ரூ.98 ஆயிரமாகவும், அமைச்சர்களுக்கான சம்பளம் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.33 லட்சமாகவும் உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான மசோதா சட்டசபையில் கொண்டுவரப்பட இருக்கிறது.  

கடந்த 2018ம் ஆண்டுதான் கேரளத்தில் கடைசியாக எம்.எல்.ஏக்களுக்கும், அமைச்சர்களுக்கும் சம்பளம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், அவர்களது சம்பளத்தை உயர்த்த அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.