கிதார் இசைக்கலைஞர் சதா என்கிற சதானந்தம் காலமானார். இவரது தந்தை சுதர்சன் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஆவார். சிவாஜி அறிமுகமான பராசக்தி, கமல் அறிமுகமான‘களத்தூர் கண்ணம்மா’ உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையத்தவர். இவரின் மகனான சதானந்தம் சிறுவயதில் இருந்தே கிதார் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதற்காக பயிற்சியும் பெற்று நன்கு கை தேர்ந்தவராக உருமாறினார்.
இசையமைப்பாளர் இளையராஜாவுடன் நீண்ட காலம் பயணித்து வந்தார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் அவரது இசைக்குழுவில் முதன்மை கிதார் இசைக்கலைஞராக பணியாற்றினார். ‘என் இனிய பொன் நிலாவே’, ‘பூவே செம்பூவே, ‘நினைவோ ஒரு பறவை’ உள்ளிட்ட பல்வேறு ஹிட் பாடல்கள் இவரது கிதார் இசையில் உருவாகியிருந்தது. கிதாரை தவிர்த்து கீபோர்டு, வைப்ராபோன் போன்ற பிற இசைக்கருவிகளையும் வாசிப்பதில் கைதேர்ந்தவர்.
இந்த நிலையில் இவர் வயது மூப்பால் வரும் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. இவரது மறைவு இசையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கல்களை தற்போது தெரிவித்து வருகின்றன.
