கடந்த அக்டோபர் 24ஆம் தேதி, தென்கிழக்கு ரயில்வேயில் இயங்கிக் கொண்டிருக்கும் மும்பை – ஹவுரா மெயில் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் சக்ரதர்பூர் கோட்டம் பண்டமுண்டாவில் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது, யாரும் எதிர்பாராதவிதமாக பி-3 ஏசி பெட்டியில் பயணி ஒருவர், அதிகாலை சுமார் 3.30 மணியளவில், தனது பவர் பேங்க்கை சார்ஜிங் பாயிண்ட்டில் இணைத்துவிட்டு உறங்கியுள்ளார்.
அப்போது, அந்த பவர் பேங்க் வெடித்ததில் அங்குத் தீப்பற்றியதுடன், பெட்டி முழுவதும் புகை பரவியுள்ளது. இந்த சம்பவத்தில் பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை எனினும், இனிவரும் காலங்களில் இது போன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க ரயில்வே நிர்வாகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவின் அனைத்து ரயில்களிலும் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை செல்போன் மற்றும் லேப்டாப் சார்ஜிங் பாயிண்டுகளுக்கான மின் இணைப்பை அணைக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. ரயில்களில், இரவு நேரத்தில் பயணிகள் கவனமின்றி சார்ஜ் போடுவதால் ஏற்படும் மின்கசிவு, அதிக வெப்பமடைதல் மற்றும் பவர் பேங்க் வெடிப்பு போன்ற தீ விபத்துகளைத் தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, இந்த உத்தரவு சரியாகப் பின்பற்றப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
