சென்னை கிண்டியில் உள்ள ஐடிஐ வளாகத்தில் நேற்றைய தினம் (28.10.2026) நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார். அதில், தனியார் நிறுவனத்தின் உதவியுடன் 30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மேம்பட்ட மின் ஆய்வகங்களை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். மேலும் 40 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீன மின் ஆய்வகங்கள் அமைத்திட அந்நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
59-வது மாநில அளவிலான திறன் போட்டியில் வெற்றி பெற்ற 15 மாணவ, மாணவியருக்குத் தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். அதோடு, அகில இந்திய தொழிற்தேர்வுகளில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற 60 மாணவ, மாணவியருக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும், 673 இளநிலை பயிற்சி அலுவலர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும் முதலமைச்சர் விஜய் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது, மாற்றுத்திறனாளி இளைஞர் தினேஷ் என்பவர் வேலைவாய்ப்பு கோரி முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார்.
இதனையடுத்து இந்தக் கோரிக்கை மனு உடனடியாகப் பரிசீலனை செய்யப்பட்டு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வாயிலாக, திருவொற்றியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒர்க்ஷாப் அசிஸ்டன்ட் பணிக்கான பணிநியமன ஆணையை முதலமைச்சர் விஜய் இன்று (29.10.2026) தலைமைச் செயலகத்தில் வழங்கினார். நேற்று கோரிக்கை மனு அளிக்கப்பட்ட நிலையில், இன்று பணிநியமன ஆணை வழங்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
