ஈரானிய திரைத்துறையில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ஜாஃபர் ஃபனாஹி. அந்நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் ஒடுக்குமுறைகள், அரச பயங்கராவதம் குறித்தான விஷயங்களை தொடர்ச்சியாக தனது படங்களில் பேசி வந்தார். இவரது படங்கள் விமர்சன ரீதியாக சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. மேலும் பல்வேறு விருதுகளையும் வாங்கியுள்ளது. இவர் இயக்கிய ‘தி சர்க்கிள், ‘கமிஷன் கோல்ட்’, ‘ஆஃப் சைட்’ உள்ளிட்ட படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. ஆனால் ஈரானில் தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் மற்றும் அரசை விமர்சித்தும் எடுத்ததற்காக தடை செய்யப்பட்டது. இது போல் தொடர்ச்சியாக இவர் அரசாங்கத்தை எதிர்த்து செயல்பட்டு வருவதாக பலமுறை சிக்கலில் சிக்கியுள்ளார்.
இவருக்கு 2010 ஆம் ஆண்டு அரசை எதிர்க்கும் போராட்டங்களை ஆதரித்தாக 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 20 வருடங்களுக்கு படமே எடுக்கக் கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டது. பின்பு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அவர், வீட்டுக் காவலிலும் சில ஆண்டுகள் அடைக்கப்பட்டார். அப்போதும் தடையை மீறி மறைமுகமாக படம் எடுத்து சர்வதேச திரைப்பட விழாக்களில் அனுப்பி வந்தார். பின்பு வெளியே வந்தும் அதை தொடர்கிறார். அந்த வகையில் அவர் ஈரானில் அனுமதியின்றி கடைசியாக எடுத்த‘இட் வாஸ் ஜஸ்ட் அன் ஆக்​ஸிடன்ட்’(It Was Just An Accident) திரைப்படம் கடந்தாண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு அவ்விழாவின் உயரிய விருதுகளில் ஒன்றான தங்கப்பணை விருதைப் பெற்றது. இப்படம் அந்நாட்டின் சிறைவாசம், பழிவாங்குதல் ஆகிய கருப்பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பரிலும் இவருக்கு ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இரண்டு வருட பயண தண்டனையும் விதித்து தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு அரசாங்கத்தை எதிர்த்து பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்போது ஜாஃபர் பனாஹி வெளிநாட்டில் இருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் ஜாஃபர் பனாஹிக்கு தெஹ்ரான் புரட்சிகர நீதிமன்றம் மற்றொரு வழக்கில் ஐந்து ஆண்டுகள் ஒரு மாதம் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் 2 ஆண்டுகள் பயணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவருக்கு விதிக்கப்பட்டிருந்த ஓராண்டு சிறைத்தண்டனையுடன் இந்த 5 ஆண்டு சிறை தண்டனை கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த புதிய உத்தரவிற்கான காரணம் இன்னும் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. இந்த உத்தரவு குறித்து பேசிய ஜாஃபர் பனாஹியின் வழக்கறிஞர், “கடந்த வாரம் பனாஹியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது. அதன் பிறகு விசாரித்த போதுதான் ​​நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருப்பது தெரியவந்தது” என்றார்.
