லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ‘ராமாயணம்’ திரைப்படத்தின் சிறப்புத் திரையிடலின்போது, 2008-ம் ஆண்டில் தனது சொத்துகளில் 90 சதவீதத்தை இழந்ததாகப் படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். அப்போது ஏற்பட்ட நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு, தற்போது இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படத் தயாரிப்பு முயற்சிகளில் ஒன்றாகக் கூறப்படும் இரண்டு பாகங்களைக் கொண்ட ‘ராமாயணம்’ படத்தை உலகம் முழுவதும் வெளியிடத் தயாராகி வருகிறார்.
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அகாடமி தியேட்டரில் அண்மையில் நடைபெற்ற இந்தச் சிறப்புத் திரையிடலைத் தனது தனிப்பட்ட ஆஸ்கர் தருணம் என்று நமித் மல்ஹோத்ரா குறிப்பிட்டார். அவர் சார்ந்துள்ள DNEG நிறுவனம் இதுவரை எட்டு அகாடமி விருதுகளை வென்றுள்ளது. அவற்றில் ஏழு விருதுகள் கடந்த 11 ஆண்டுகளில் காட்சி விளைவுகள் (Visual Effects) பணிகளுக்காகக் கிடைத்தவை. கிறிஸ்டோபர் நோலன், டெனிஸ் வில்லென்யூவ் உள்ளிட்ட ஹாலிவுட் இயக்குநர்களின் படங்களிலும் இந்நிறுவனம் பணியாற்றியுள்ளது.
இருப்பினும், மல்ஹோத்ராவுக்கு இந்த நிகழ்வு தனது நிறுவனத்தின் சாதனைகளைக் கொண்டாடுவதற்கான வாய்ப்பாக மட்டுமல்லாமல், தனது பயணத்தின் தொடக்கத்தை நினைவுகூரும் தருணமாகவும் அமைந்தது. மும்பையில் உள்ள ஒரு சிறிய கேரேஜில், ஆப்பிள் கணினியையும் தனது முன்னாள் ஆசிரியர்கள் மூவரின் உதவியையும் கொண்டு, 19 வயதில் அவர் தொழில் தொடங்கினார்.
“இந்த மாலை நிகழ்ச்சியை அகாடமி தியேட்டரில் நடத்த விரும்பினேன். இது எனது ஆஸ்கர் தருணம். மூன்றாவது தலைமுறையாகத் திரைப்படத் துறையுடன் தொடர்புடைய குடும்பத்தில் இருந்து வந்த ஒருவர், 19 வயதில் ஒரு கேரேஜில் ஆப்பிள் கணினியுடன் தொழில் தொடங்கி, அப்போது 21 வயதாக இருந்த தனது மூன்று ஆசிரியர்களுடன் இணைந்து பணியாற்றிய நிலையில், இன்று இங்கு நிற்பது கனவுகள் நனவாகும் தருணம்” என்று அவர் தெரிவித்தார்.
2007-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸுக்குச் சென்றபோது மல்ஹோத்ராவின் சர்வதேசப் பயணம் தொடங்கியது. இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளின் திரைப்படத் துறைகளை இணைக்கும் நிறுவனத்தை உருவாக்குவதே அவரது நோக்கமாக இருந்தது. ஆனால், அடுத்த ஆண்டே உலகளாவிய நிதி நெருக்கடி ஏற்பட்டதால், அவரது தொழில் முயற்சியும் கடுமையான பாதிப்பைச் சந்தித்தது.
“உலகளாவிய நிறுவனத்தை உருவாக்கி, கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் முயற்சியில் 2007-ல் லாஸ் ஏஞ்சல்ஸில் காலடி எடுத்து வைத்தேன். அதன்பிறகு திரும்பிப் பார்க்கவில்லை. 2008-ல் உலகப் பொருளாதாரம் நெருக்கடியைச் சந்தித்த காலத்தில், வெளிநாட்டில் குடியேறிய ஒருவராக எனது சொத்துகளில் 90 சதவீதத்தை இழந்தேன். அந்தக் காலகட்டத்தை உங்களில் சிலர் நினைவில் வைத்திருக்கலாம். இன்று மீண்டு வந்து, உலகின் மிகப்பெரிய சுயாதீனத் திரைப்படத் தயாரிப்பு முயற்சியைக் கொண்டுவரும் நிலையில் இங்கு நிற்பது எப்படி இருக்கிறது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை” என்று அவர் கூறினார்.
தனது கடினமான காலகட்டத்தில் துணையாக இருந்தவர்களுக்கும் மல்ஹோத்ரா நன்றி தெரிவித்தார். தனது பெற்றோரான நீதா மற்றும் நரேஷ் மல்ஹோத்ரா, தனது மனைவி ஆகியோர் தனது கனவின் மீது நம்பிக்கை வைத்திருந்ததாக அவர் குறிப்பிட்டார். திரைப்பட இயக்குநராக இருந்த அவரது தந்தை, தயாரிப்புத் துறையில் பணியாற்ற அவரை ஊக்குவித்தார். ஆனால், மல்ஹோத்ரா ஆரம்பத்தில் பிந்தைய தயாரிப்புப் பணிகள் (Post-production) மற்றும் காட்சி விளைவுகள் துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார்.
“ஒரு கட்டத்தில் திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பிந்தைய தயாரிப்புப் பணிகள் மற்றும் காட்சி விளைவுகள் துறைக்குள் நுழைந்தேன். இன்று அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்” என்று அவர் கூறினார்.
மும்பையில் உள்ள ஒரு கேரேஜில் சிறிய அளவிலான காணொளி தொகுப்பு மற்றும் கணினி வரைகலை நிறுவனத்தைத் தொடங்கிய மல்ஹோத்ரா, 1997-ம் ஆண்டு அந்தத் தொழிலைத் தனது தந்தையின் திரைப்பட உபகரண வாடகை நிறுவனத்துடன் இணைத்தார். இதன் மூலம் பிரைம் ஃபோகஸ் லிமிடெட் (Prime Focus Limited) நிறுவனம் உருவானது. அதன் பின்னர், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படத் துறைகளுக்கு இடையே வலுவான தொடர்புகளை ஏற்படுத்தும் நோக்கில் 2007-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸுக்குச் சென்றார்.
2014-ம் ஆண்டு, பிரைம் ஃபோகஸ் நிறுவனம் லண்டனைச் சேர்ந்த காட்சி விளைவுகள் நிறுவனமான டபுள் நெகட்டிவ் (Double Negative) உடன் இணைந்தது. பின்னர் இந்த நிறுவனம் DNEG எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. முன்னணி திரைப்பட இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம், காட்சி விளைவுகள் பிரிவில் எட்டு அகாடமி விருதுகளை நிறுவனம் வென்றது. இதையடுத்து, பிந்தைய தயாரிப்புப் பணிகள் மற்றும் காட்சி விளைவுகள் துறைகளைக் கடந்து, பெரிய அளவிலான திரைப்படங்களைத் தயாரிப்பதிலும் மல்ஹோத்ரா கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த முயற்சியின் அடுத்த கட்டமாக ‘ராமாயணம்’ திரைப்படம் உருவாகியுள்ளது. நிதேஷ் திவாரி இயக்கும் இப்படத்தை யாஷ் இணைந்து தயாரிக்கிறார். இரண்டு பாகங்களையும் சேர்த்து இப்படம் சுமார் ரூ.4,000 கோடி செலவில் உருவாக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, ரவி துபே ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரகுல் ப்ரீத் சிங், விவேக் ஓபராய், லாரா தத்தா மற்றும் அருண் கோவில் ஆகியோரும் இப்படத்தில் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
