தமிழக முதல்வர் விஜயின் மகனும் இயக்குனருமான ஜேசன் சஞ்சய், நான் எந்த ஒரு ரசிகர் மன்றமும் தொடங்கவில்லை என்றும், எனது ரசிகர் மன்றம் என கூறும் பக்கங்கள் போலியானவை. போலி கணக்குகளில் இருந்து வரும் பதிவுகளுக்கு நான் பொறுப்பு அல்ல என்றும் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த விஜய், நடிப்பில் இருந்து விலகி, அரசியல் கட்சி தொடங்கி முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக தமிழ் சினிமாவில் களமிறங்கியுள்ளார். அவரது இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்த சிக்மா படத்தில், சந்தீப் கிஷான் நாயகனாக நடித்திருந்தார். அக்டோபர் 2-ந் தேதி வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
மேலும் இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகாக பல யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்திருந்த ஜேசன் சஞ்சய் பேசிய விதம், பலரின் மனதை கவர்ந்தது. குறிப்பாக முதல்வரின் மகன் என்ற உணர்வே இல்லாமல், அவர் சாதாரணமாக பேசியது குறித்து இணையத்தில் பலரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர். முதல் படம் வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அடுத்து ஜேசன் சஞ்சய் நாயகனாக களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதனிடையே முதல் படத்திலேயே தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாமாவில், பிரபலமான இயக்குனராக மாறிவிட்ட ஜேசன் சஞ்சய் பெயரில் சமூகவலைதளங்களில் பல கணக்குகள் உள்ளன. இதில் இருந்து பல்வேறு பதிவுகளும் வெளியாகி வரும் நிலையில், இதற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. தான் ரசிகர் மன்றம் தொடங்கவில்லை என்றும் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள ஜேசன் சஞ்சய் அதில் தனது அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கத்தின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ஜேசன் சஞ்சய் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனக்கு ரசிகர் மன்றம் இல்லை. நான் எந்த ஒரு ரசிகர் மன்றமும் தொடங்கவில்லை. எனது பெயரில் இயங்கும் பக்கங்கள் போலியானவை. என்னுடைய அதிகாரப்பூர்வமான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சமூக வலைதள கணக்குகளை முறைப்படி அறிவிக்க இந்த கடிதத்தை எழுதுகிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள கணக்குகள் மட்டுமே என்னால் நிர்வகிக்கப்படும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ கணக்குகள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கை தொடர்பான இன்ஸ்’டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் இதற்கு தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
