விஜயுடன் தொடர்புபடுத்தி உதயநிதி அறிக்கை: சென்னையில் கைதான பி.எல்.எம் பிரேம்குமார் யார்?

தமிழக எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில், “5 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த பி.எல்.எம் (BLM) பிரேம்குமாருக்கும் தூய சக்தி முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு? தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதலீடு செய்த பணத்தை தன்னுடைய சொந்தக் கணக்கிற்கு வரவு வைத்துக் கொண்டதாக பிரேம்குமார் என்பவரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது.

இந்த பிரேம்குமார் கடந்த ஜூலை மாதம் தான் இங்கிருக்கும் டம்மி சி.எம்-ஐ சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும், த.வெ.க-வின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரேம்குமாருக்கு சொந்தமான பேருந்துகள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. முக்கியமாக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பிரேம்குமாரின் பேருந்துகளிலேயே அழைத்து வரப்பட்டனர். 

பிரேம்குமாருக்கும் முதலமைச்சருக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பார்க்கும் போது, அந்த நபருக்கும் – ஆளுங்கட்சிக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன? அப்படி எந்த “விவகாரமான”தொடர்பும் இல்லை எனில், ஏன் அவசர அவசரமாக, முதலமைச்சரும் – கைது செய்யப்பட்டுள்ள நபரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தமிழ்நாடு காவல்துறை உதவியோடு சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும்?

எம்.எல்.ஏ-க்களை வாங்குவது செய்வது, சோஃபா அனுப்புவது, இடைத்தேர்தல்களில் வாரி இறைத்தது என்று த.வெ.க.வின் முறைகேடான அரசியல் செயல்பாடுகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா? இதையெல்லாம் சி.பி.ஐ, எஸ்.எஃப்.ஐ.ஓ, இடி (CBI, SFIO, ED) போன்ற ஒன்றிய அரசின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்புகள் தலையிட்டு விசாரிக்க வேண்டும் –  கைதான பிரேம்குமாருக்கும், த.வெ.க தலைமை முதல் முக்கிய நிர்வாகிகள் வரைக்கும் இருக்கும் தொடர்பை கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என்று  கூறிருந்தார். 

பி.எல்.எம் பிரேம்குமார் யார்? 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்து, சென்னையில் வளர்ந்தவர் ஆர். பிரேம்குமார். இவரது தந்தை சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் பணியாற்றியவர். வங்கிகளில் கடன் பெறுவதில் உள்ள சிரமங்களைப் போக்க, 2006-ல் நான்கு நண்பர்களுடன் இணைந்து வீட்டு வசதி சங்கமாக பி.எல்.எம் அமைப்பைத் தொடங்கினார். ஆனால், அடுத்த 20 ஆண்டுகளில் இந்த சங்கம் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பல்வேறு துறைகளில் அசுர வளர்ச்சி அடைந்தது. 

நில மேம்பாடு, பேருந்து போக்குவரத்து, சிமெண்ட் ஆலைகள், தங்க நகை விற்பனை நிலையங்கள், சொகுசு ரிசார்ட்டுகள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் உயிரி எரிவாயு உற்பத்தி எனப் பல தொழில்களில் முதலீடுகள் குவிக்கப்பட்டன. மக்களிடம் வாங்கிய பல ஆயிரம் கோடி ரூபாய் நிதியை, கூட்டுறவு சங்க விதிகளுக்குப் புறம்பாக பிரேம்குமார் தனது சொந்த வங்கிக் கணக்குகளுக்கும், குடும்பத்தினரின் பெயர்களுக்கும், பிற தனியார் தொழில் நிறுவனங்களுக்கும் முறைகேடாக மாற்றியதாகப் புலனாய்வு அமைப்புகள் குற்றம்சாட்டின. 

குறிப்பாக, இந்த நிதியைக் கொண்டு சொகுசு ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், தியேட்டர்கள் மற்றும் நிலங்களை வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அமலாக்கத்துறை மற்றும் குற்றப்பிரிவு தீவிர நடவடிக்கை மக்களின் பணம் பல நிறுவனங்களுக்குத் திசைதிருப்பப்பட்ட விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மற்றும் ஹவாலா முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, அமலாக்கத்துறை (ED) தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. 

இதற்கிடையே, இரண்டு நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரத்துக்குச் சென்ற பிரேம்குமார், வழக்கைத் திசைதிருப்ப அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், முறைகேட்டில் ஈடுபட்ட எவருக்கும் சமரசம் இல்லை என கேரள அரசு உறுதியான நிலைப்பாடு எடுத்ததைத் தொடர்ந்து, அவரைப் பின்தொடர்ந்து சென்னை வந்த கோழிக்கோடு போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

விஜயுடன் புகைப்படம் 

பிரேம்குமார் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றின் இயக்குநர்களில் ஒருவராக செயல்பட்டு வந்துள்ளார். கடந்த ஜூலை 3, 2026 அன்று, அந்தத் தொலைக்காட்சியின் நிர்வாகக் குழுவினர் தமிழக முதல்வர் விஜய்யை சந்தித்தபோது எடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ புகைப்படத்திலும் பிரேம்குமார் இடம்பெற்றிருந்தார். தற்போது இவர் கைதாகியுள்ளது ஊடக மற்றும் வணிக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Source link