ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் : செய்து தமிழக அரசு உத்தரவு!

தமிழக அரசின் உள் துறை இன்று (29.10.2026) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, 5 முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த சஞ்சய் மாத்தூர், சென்னை மாநில குற்றப் பதிவேடுகள் பணியகத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றி வந்த சோனல் சந்திரா, டிஜிபி அலுவலகத்தின் தலைமையிட ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

தாம்பரம் மாநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பள்ளிக்கரணை துணை ஆணையராக இருந்த பி. ரகுபதி, கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக  நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவின் காவல் கண்காணிப்பாளராக இருந்த ஆர். ஸ்டாலின், தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த எஸ். அசோக் குமார், மதுரை பயங்கரவாத எதிர்ப்புப் படையின் காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மற்றொரு அறிவிப்பின் படி சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் இயக்குநராக இருந்த டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சென்னை டான்ஜெட்கோ பிரிவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாக பணியிடம் செய்யப்பட்டுள்ளார். அதே சமயம், அமலாக்கப் பிரிவு சிஐடி கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வந்த கே. சங்கர் சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.