இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அணிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை; அடுத்து என்ன நடக்கும்!

-நமது சிறப்பு நிருபர்-

மேற்காசிய நாடான இஸ்ரேலின் பார்லிமென்டுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள, 120 இடங்களில், 61 இடங்களைப் பிடிக்கும் கட்சி அல்லது கூட்டணியே ஆட்சி அமைக்க முடியும். அனைத்து ஓட்டுக்களும் எண்ணப்பட்ட நிலையில் நெதன்யாகுவின் அணி 53 இடங்களையும், எதிர்க்கட்சி 48 இடங்களையும், அரபு கட்சிகள் 19 இடங்களையும் பெற்றுள்ளன.

எந்த அரசியல் கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இது, சவாலான கூட்டணிப் பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கிறது. நெதன்யாகுவின் லிகுட் கட்சி 27 இடங்களை வென்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து உள்ளது. ஆனால் அவரது கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், மீண்டும் ஆட்சி அமைக்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்காது.

அடுத்து என்ன நடக்கும்?

நெதன்யாகு மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரண்டு அணிக்கும் அரசை அமைப்பதில் சிக்கல் நிலவுகிறது. ஆட்சி அமைக்க அரபு கட்சிகளின் ஆதரவை சார்ந்திருக்க வேண்டியிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கூட்டணி அமைக்க அனைத்து முயற்சிகளையும் இஸ்ரேல் பிரதமர் மேற்கொள்வார். எந்த கூட்டணியும் அமையவில்லை என்றால், அந்நாடு மற்றொரு தேர்தலை எதிர்கொள்ள நேரிடலாம்.

மீண்டும் தேர்தலை தவிருங்கள்!

இஸ்ரேலின் அரசியலமைப்பு சட்டத்தின்படி, நேரடி பிரதமர் தேர்தல் கிடையாது. மாறாக, பார்லிமென்ட் உறுப்பினர்களின் ஆதரவைப் பெறக்கூடியவரையே, அதிபர் ஐசக் ஹெர்சாக் ஆட்சி அமைக்க முறைப்படி அழைப்பு விடுப்பார். தேர்தலுக்குப் பின், கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அதிபர் ஐசக் ஹெர்சாக் ஆலோசனை நடத்துவார். பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்புள்ள தலைவரை ஆட்சி அமைக்க அவர் அழைப்பார். மீண்டும் ஒரு தேர்தலை தவிர்க்க அரசியல் தலைவர்கள் பேசி சுமுக தீர்வு காண வேண்டும் என அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Source link