இன்று ஐப்பசி தேய்பிறை பஞ்சமி 2026 வராஹி அம்மனின் அருளை பெற வீட்டில் செய்ய வேண்டிய எளிய வழிபாடு

இறைவழிபாட்டில் ஒவ்வொரு திதிக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அவ்வகையில், ஐப்பசி மாத பஞ்சமி திதியில் ஸ்ரீ வாராஹி அம்மனை வழிபடுவது சக்தி வழிபாட்டில் சிறப்புடையதாகப் பக்தர்களால் கருதப்படுகிறது. திதிகளில் ஐந்தாவதாக வரும் பஞ்சமி திதி, வராஹி அம்மனை வழிபடுவதற்கு ஏற்ற நாளாக கருதப்படுகிறது. அதிலும் தேய்பிறை பஞ்சமி, கஷ்டங்கள் அனைத்தும் தீருவதற்கான வழிபாட்டினை செய்வதற்கு மிகவும் ஏற்ற நாளாகும். இந்த ஆண்டு ஐப்பசி மாத தேய்பிறை பஞ்சமி அக்டோபர் 30ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. வெள்ளிக்கிழமையுடன் இணைந்து தேய்பிறை பஞ்சமி வரும் இந்த நாள் மிகவும் சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் சில எளிய வழிபாடுகளை மாலை நேரத்தில் செய்தால், வராஹி அம்மனின் அருளால் அனைத்து விதமான கஷ்டங்களும் தீரும் என்பது நம்பிக்கை.

ஐப்பசி தேய்பிறை பஞ்சமி திதி, சப்தகன்னியர்களில் ஒருவரான ஸ்ரீ வாராஹி அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது. வாராஹி அம்மனை இந்நாளில் வழிபடுவதால் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள், மறைமுகப் போட்டிகள் மற்றும் வாழ்வில் உள்ள தடைகள் நீங்கும். தீராத கடன் சுமையால் அவதிப்படுவோருக்கு நற் பலன்களும், நிம்மதியும் கிடைக்க இந்த வழிபாடு உதவும். குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் நீங்கி, ஒற்றுமையும் மன அமைதியும் நிலவ இந்த பஞ்சமி வழிபாடு வழிவகுக்கிறது.

ஐப்பசி வெள்ளிக்கிழமை தேய்பிறை பஞ்சமி வழிபாடு :

– மாலை 05.45 முதல் 07.15 வரையிலான நேரத்தில் வாராஹி அம்மன் படத்திற்கு முன் ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்து, செவ்வரளி, செம்பருத்தி போன்ற சிவப்பு நிற மலர்களை அணிவிக்க வேண்டும்.

– “ஓம் ஐம் ஹ்ரீம்

ஸ்ரீம் வாராஹ்யை நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.

– தோல் நீக்காத உளுந்தில் செய்யப்பட்ட வடை, சர்க்கரைவல்லிக்கிழங்கு, தேன் கலந்த மாதுளை முத்துக்களை போன்ற வாராஹிக்கு விருப்பமான பொருட்களை நைவேத்தியமாக படைக்க வேண்டும்.

– ஒரு தட்டில் கல் உப்பினை பரப்பி, அதன் மீது ஒரு அகலில் நெய் விட்டு விளக்கேற்ற வேண்டும். இது வீட்டில் உள்ள கண் திருஷ்டி, எதிர்மறை ஆற்றல்கள், பணத்தடை ஆகியவற்றை அகற்றி விடும்.

– வீட்டில் வாராஹி அம்மன் சிலை வைத்திருந்தாலோ அல்லது அருகில் உள்ள கோவிலுக்கு சென்று அங்குள்ள வாராஹி அம்மனுக்கோ மஞ்சளை அரைத்து காப்பாக சாற்றி வழிபடலாம்.

– பஞ்சமி திதி வரும் நாட்களில் வாராஹி அம்மனை தொடர்ந்து வழிபட்டால் தொழில் வளரும், கடன், வழக்கு, எதிரிகள் தொல்லை நீங்கும். பயம் நீங்கி அபார தைரியம் பிறக்கும். தடைபட்ட காரியங்கள் வெற்றி அடையும்.

– வீட்டில் ஐந்து அகல் விளக்குகளில் விளக்கேற்றி, அதில் வாராஹி அம்மன் எழுந்தருளி இருப்பதாக நினைத்து வழிபட வேண்டும்.

– நீல சங்குப்பூ மற்றும் மருதாணி இலை கிடைத்தால் அதனைக் கொண்டு அம்மனுக்கு அர்ச்சனை செய்வது சிறப்பு. இவை இரண்டுமே மகாலட்சுமி வாசம் செய்யும் பொருட்களாக கருதப்படுவதால் இவற்றைக் கொண்டு வாராஹிக்கு அர்ச்சனை செய்வதால் குடும்பம் சார்ந்த பிரச்சனைகள், பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள் தீரும்.

வாராஹி வழிபாடு :

அன்னை பராசக்தியின் சக்தி வடிவங்களில் ஒருவராகவும், சப்தமாதர்களில் ஒருவராகவும் ஸ்ரீ வாராஹி அம்மன் போற்றப்படுகிறாள். திருமாலின் வராக அவதாரத்துடன் தொடர்புடைய சக்தி வடிவமாகவும் அன்னை வழிபடப்படுகிறாள். தீமைகளை அழித்து தர்மத்தைக் காக்கும் சக்தியாக விளங்கும் வாராஹி அம்மனை வழிபடுவதால் மனதில் தைரியமும் நம்பிக்கையும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Source link