நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஹெச் வினோத் கூட்டணியில் உருவாகி சென்சார் சான்றிதழ் பிரச்சினையால் திரையரங்குகளில் வெளியாகாமல் உள்ள திரைப்படம் “ஜன நாயகன்.” கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தப் படத்தின் காட்சிகளும் அதன்பிறகு முழு திரைப்படமும் இணையத்தில் கசிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்த ஜன நாயகன் திரைப்படத்தை கேபிள் டி.வி.யில் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் நடத்தப்பட்டு வரும் ராசி பிரைம் மூவி என்ற கேபிள் டி.வி.யில் ஜன நாயகன் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. இது குறித்து கோவை மாவட்ட த.வெ.க. நிர்வாகி அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் கேபிள் டி.வி. உரிமையாளரை கைது செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்டவர் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி ராம்நகரை சேர்ந்த பழனிசாமி என்று தெரியவந்தது. மேலும், இவர் கேபிள் டி.வியில் ராசி டி.வி. என்ற பெயரில் உள்ளூர் சேனலையும் அவர் நடத்தி வருகிறார். இந்த சேனல் கேபிள் டி.வி. மூலம் பொதுமக்களுக்கு சென்றடைகிறது. இதில் பொழுதுபோக்கு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நடிகர் விஜய் நடித்து தணிக்கை சான்று பெறாமல் இருக்கும் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தை கடந்த 11-ஆம் தேதி கேபிள் டி.வி. மூலம் இந்த சேனலில் ஒளிபரப்பு செய்ததாக தெரிகிறது. அதை பார்த்த விஜய் ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தமிழக வெற்றிக்கழக கோவை கிழக்கு மாவட்ட துணை செயலாளர் மோகனபிரியா கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கேபிள் டி.வி. நடத்தி வரும் பழனிசாமி (வயது 44) என்பவர்தான் ஜனநாயகன் திரைப்படத்தை உள்ளூர் சேனலில் ஒளிபரப்பு செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
அத்துடன், மத்திய தணிக்கை குழுவால் அனுமதி அளிக்காத திரைப்படத்தை வெளியிட்ட அவர் நடத்தி வந்த தனியார் சேனல் நிறுவனத்தையும் போலீசார் பூட்டி சீல் வைத்தனர். தொடர்ந்து அவர் எந்த அடிப்படையில் திரைக்கு வராத ஜனநாயகன் திரைப்படத்தை உள்ளூர் சேனலில் ஒளிபரப்பு செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
